திருவள்ளூர் அருகே நண்பனை ஓட, ஓட விரட்டி கொலை செய்த தொழிலாளி
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் நண்பனை ஓட, ஓட விரட்டி கொலை செய்த தொழிலாளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
வாய்த்தகராறு
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமம், ஜெ.ஜெ.நகர், சிபி சிற்றரசன் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் முருகன் (வயது 31). இவர் திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் முருகனின் நண்பரான புல்லரம்பாக்கம் ஜெ.ஜெ. நகர் நேதாஜி தெருவை சேர்ந்த அப்பு என்கின்ற சுபாஷ் சந்திரபோஸ் (28) என்பவரும் அவருடன் பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் முருகனுக்கும், அவரது நண்பரான சுபாஷ்சந்திரபோசுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சண்டையிட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்றனர்.
வெட்டிக்கொலை
இரவு முருகன் தன் வீட்டில் இருந்த போது மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுபாஷ் சந்திரபோஸ் முருகனை தனியாக அழைத்துச் சென்ற நிலையில், ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த வெட்டு காயமடைந்த முருகன் தப்பியோடினார். இருப்பினும் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டிச் சென்று தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்து போனார்.
இதனையடுத்து சுபாஷ் சந்திரபோஸ் புல்லரம்பாக்கம் போலீசில் சரணடைந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் லில்லி, சுப்பிரமணி, சக்திவேல், மாலா ஆகியோர் இறந்து போன முருகனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story