ஆனைமலையில் நெல் கொள்முதல் தொடக்கம்

ஆனைமலையில் நெல் கொள்முதல் தொடக்கம்
பொள்ளாச்சி
ஆனைமலையில் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெல் கொள்முதல்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் காரப்பட்டி, பள்ளிவிளங்கால், வடக்கலூர், அரியாபுரம், பெரியணை ஆகிய 5 கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் இருபோகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் முதல் போக நெல் சாகுபடி முடிந்து நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது குளப்பத்துக்குளம், காரப்பட்டி பகுதிகளில் நெல் அறுவடை நடக்கிறது.
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி ஆனைமலையில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. ஆனால் அரசின் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கொள்முதல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டதால் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 500 டன் நெல் தேக்கம் அடைந்தன. இதற்கிடையில் பழைய நடைமுறையை பின்பற்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஒரே நாளில் 16 டன்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று முதல் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது. ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து நுகர்வோர் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் 16 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் புதிய விலை உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2060-க்கும், பொது ரகம் குவிண்டாலுக்கு ரூ.2015-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
விலையை உயர்த்த வேண்டும்
ஆனைமலை கொள்முதல் நிலையத்தில் பழைய நடைமுறையின்படி விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து தொடங்கி உள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நெல்லிற்கு உரிய விலை கிடைக்கவில்லை. தற்போது நெல் நடவு முதல் அறுவடை வரை ஏற்படும் செலவு தொகை அதிகரித்துவிட்டது.
உரங்களின் விலை இருமடங்கு உயர்ந்து உள்ளது. மேலும் தனியார் எந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது ஒரு மணி நேரத்திற்கு ரூ.2400 வரை வாடகை கொடுக்க வேண்டிய உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. நஷ்டம் தான் ஏற்படுகிறது. எனவே குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை விலையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






