தெப்பக்குளமேடு பகுதியில் கல்லார் மலைவாழ் மக்கள் குடியேறியதால் பரபரப்பு

தெப்பக்குளமேடு பகுதியில் கல்லார் மலைவாழ் மக்கள் குடியேறியதால் பரபரப்பு
வால்பாறை
குடியிருக்க இடம் கேட்டு 3-வது நாளாக போராட்டம் நடத்திய கல்லார் மலைவாழ் மக்கள் திடீரென தெப்பக்குள மேடு பகுதியில் குடியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
3-வது நாளாக போராட்டம்
வால்பாறையில் தாய்முடி எஸ்டேட் பகுதி அருகே கல்லாரில் பழங்குடியி மலைவாழ் மக்கள் வசித்து வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு வால்பாறை பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் மண்சரி ஏற்பட்டது. இதனால் உயிர் பாதுகாப்பு கருதி இதே வனப்பகுதிக்குள் தெப்பக்குளமேடு என்ற இடத்தில் குடியிக்க இடம் கேட்டு மலைவாழ் மக்கள் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
தெப்பக்குளமேடு பகுதியில் குடியேறினர்
இந்தநிலையில் உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் உண்ணாவிரத பந்தலை அகற்றிய கல்லார் மலைவாழ் மக்கள் தெப்பக்குளமேடு பகுதிக்கு திடீரென சென்று குடியேறி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுபற்றி அறிந்ததும் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன், வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஶ்ரீனிவாசன் ஆகியோர் வால்பாறை தாலுகா அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உதவியாக இருந்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் சண்முகம், மலைவாழ் மக்களின் போராட்ட வழிகாட்டு குழு பொறுப்பாளர் தன்ராஜ், ஆதிவாசி பழங்குடியினர் சங்க தலைவர் தங்கசாமி, கல்லார் மலைவாழ் கிராம மக்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வனத்துறையினர் குவிப்பு
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், தெப்பக்குளமேடு பகுதியில் குடியேறி விட்டோம். எனவே வனத்துறையினர் நிரந்தரமாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தெப்பக்குளமேடு பகுதியில் வனத்துறையினர் குவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story






