கச்சிராயப்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்


கச்சிராயப்பாளையம் பகுதியில்  குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Oct 2021 4:50 PM GMT (Updated: 2021-10-04T22:20:46+05:30)

கச்சிராயப்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கச்சிராயப்பாளையம்

வடக்கநந்தல் பேரூராட்சி

கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தல் பேரூராட்சிக்குட்பட்ட அக்கராயப்பாளையம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவா்களுக்கு கோமுகி ஆற்று கரையோரத்தில் உள்ள கிணறு மூலம் குழாய் அமைத்து அக்கராயப்பாளையம் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாத காலமாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலையில் அக்கராயப்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டபொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

போதுமானதாக இல்லை

அப்போது எங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சரியான முறையில் தண்ணீர் வழங்கவில்லை. 2 முதல் 3 குடம் தண்ணீர் பிடித்ததும் தண்ணீர் நின்று விடுகிறது. இது எங்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் வினியோகம்செய்யப்படும் குடிநீர் சேறு நாற்றம் அடிப்பதால் அதை குடிக்க முடியவில்லை. 
இது பற்றி பேரூராட்சி செயல் அலுவலரிடம்  பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை பேரூராட்சி செயல் அலுவலர் வரும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்கள். 

போக்குவரத்து பாதிப்பு

ஆனால் பேரூராட்சி செயல் அலுவலர் வராததால் சாலை மறியலை கைவிட பொதுமக்கள் மறுத்தனர். இதையடுத்து உங்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என்று போலீசார் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியலால் கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் இடையே சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story