விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழைக்கு 6 வீடுகள் சேதம்


விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழைக்கு 6 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 4 Oct 2021 5:59 PM GMT (Updated: 4 Oct 2021 5:59 PM GMT)

தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழைக்கு 6 வீடுகள் சேதம் அடைந்தன. விவசாய பயிர்கள் நாசமாகின. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

தேனி: 


 கொட்டித்தீர்த்த மழை
தேனி, வீரபாண்டி, கூடலூர், பெரியகுளம், சோத்துப்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் விடிய, விடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. 
இதனால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி தேனி அருகே நாகலாபுரத்தில் வடிகாலில் மழைநீர் செல்ல முடியாமல் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சுற்றிலும் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. 

 பயிர்கள் நாசம்
இதேபோல் கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய் அருகே உள்ள வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டது. இதனால், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. 
தப்புக்குண்டு, தாடிச்சேரி, பூமலைக்குண்டு, ஸ்ரீரெங்கபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த மக்காச்சோளம், தக்காளி போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. 

6 வீடுகள் இடிந்தன
பலத்த மழை எதிரொலியாக ஸ்ரீரெங்கபுரம் கிராமத்தில் காளியப்பன், ஆவுடைத்தாய், பம்பையாராஜ் ஆகியோரின் வீடுகள் இடிந்து விழுந்து, அங்கு இருந்த பொருட்கள் நாசமாகின.
மேலும் மல்லையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஒச்சாத்தேவர், பெரியகுளம் அருகே எண்டப்புளியை சேர்ந்த அழகுஜோதி, போடியில் பக்தசேவா தெருவை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளும் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த 6 வீடுகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். 

உறைகிணறு மீது விழுந்த தென்னை
தேனி அருகே உப்புக்கோட்டை, கூழையனூர் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. கூழையனூரில் பெய்த மழையால் அங்குள்ள காட்டாற்று ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கூழையனூர்-உப்புக்கோட்டை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேற்று வெள்ளம் வடிந்தது. இதையடுத்து அங்கு சாலையில் குவிந்து கிடந்த மண், செடி, கொடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பலத்த மழையால் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள தடுப்பணை அருகில் நின்ற தென்னை மரம் வேரோடு சாய்ந்து குடிநீருக்கான உறைகிணறு மீது விழுந்தது. மாணிக்காபுரத்தில் மக்கச்சோள பயிர்கள் மழையால் நாசமாகின. 
உப்புக்கோட்டை அருகே களஞ்சியம் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வெங்காய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், அவை அழுகி நாசம் ஆகின. சடையால்பட்டி பகுதியில் நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்தன. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையளவு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:-
அரண்மனைப்புதூர்-5.2, போடி-30.2, கூடலூர்-19.4, மஞ்சளாறு-4, பெரியகுளம்-16, சோத்துப்பாறை-30, உத்தமபாளையம்-17.3, வைகை அணை-6, வீரபாண்டி-124, முல்லைப்பெரியாறு-16, தேக்கடி-9 என மழையளவு பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 286.70 மில்லிமீட்டர் மழையளவு பதிவானது. இது கடந்த 5 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழையளவு என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story