தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 Oct 2021 6:13 PM GMT (Updated: 4 Oct 2021 6:13 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

குப்பைகளுக்கு தீ வைப்பது தடுக்கப்படுமா?

உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலையில் ஏராளமான கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்த குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைப்பதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குப்பைகளை அகற்றுவதுடன், தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சுரேஷ், கோவை.

மேம்பால தடுப்புச்சுவரில் ஆபத்து

  கோவை அவினாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் நஞ்சப்பா சாலை செல்லும் வழியே இடதுபுறம் உள்ள தடுப்பு சுவரில் செடிகள் முளைத்து உள்ளன. அவை வளர்ந்துவிட்டால் தடுப்புச்சுவருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடனே அதை அகற்ற வேண்டும்.

  குமார், கோவை.

குண்டும், குழியுமான சாலை

  கிணத்துக்கடவு அருகே உள்ள பட்டணத்தில் இருந்து நல்லட்டி பாளையம் ஊருக்கு செல்லும் தார்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து பயணம் செய்கிறார்கள். வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த தார் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன்வருவார்களா?

  ரமேஷ்குமார், நல்லட்டிபாளையம்.

விபத்துகள் தடுக்கப்படுமா?

  கோவை -பொள்ளாச்சி இடையே 4 வழி சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க, விபத்து ஏற்படும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பதாகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சிவகுமார், கிணத்துக்கடவு.

குதிரைகளால் விபத்து அபாயம்

  ஊட்டி கலெக்டர் அலுவலக சாலையில் குதிரைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் அருகே குதிரைகள் நின்று கொண்டு திடீரென குறுக்கே வருவதால், சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குதிரைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மகாலட்சுமி, பிங்கர்போஸ்ட், ஊட்டி.

குப்பைகளால் சுகாதார பாதிப்பு

  ஊட்டி புதுமந்து பகுதியில் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொருட் கள், பைகள் போன்ற கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பொருட்கள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டு வருகிறது. ஆகவே, திறந்தவெளியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க வேண்டும்.

  கண்ணன், கோழிப்பண்ணை, ஊட்டி.

தினத்தந்தி செய்தி எதிரொலி:

அடைப்பு சரிசெய்யப்பட்டது

  கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து ராயன் தெரு வழியாகச் செல்லும் கழிவுநீர்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப் பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த அடைப்பை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், பேரூராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி.

  டென்னிஸ், கோத்தகிரி

தலைவர்கள் படம் அருகே குப்பை 

  கோவை பீளமேடு பன்மால் பின்புறம் உள்ள கல்லூரி நகர் பூங்கா முன்புறம் தலைவர்கள் படம் வரையப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை தொட்டியை அகற்றி வேறு இடத்தில் வைத்து சுகாதாரத்தை பேணுவதுடன், தலைவர்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும்.

  நந்தகோபால், சவுரிபாளையம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

  இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அத்தப்பகவுண்டன் புதூர் 1-வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதை சரிசெய்ய வேண்டும்.

  தினேஷ், அத்தப்பகவுண்டன்புதூர்.

மின்கம்பத்தால் ஆபத்து 

  கோவை வ.உ.சி. பூங்காவில் உள்ள உயர் மின்கம்பத்தில் கீழ்ப்பகுதி யில் மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது. இதனால் அங்கு எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மூடி அமைக்க வேண்டும்.

  தேவராஜ், கோவை.

மினிபஸ்கள் வேண்டும்

  கோவையில் இருந்து கோவைப்புதூருக்கு மினிபஸ்கள் இயக்கப் பட்டன. கொரோனா பரவல் காரணமாக அவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த மினிபஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.

  சுரேஷ், கோவைப்புதூர்.

மழைநீர் தேங்குவதால் அவதி

  போத்தனூரில் உள்ள மாரியப்பகோனார் வீதி 2-வது சந்திலி் மழை பெய்தால் வீடுகளுக்கு முன்பு தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வீடுகளுக்கு முன்பு தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

  ராஜப்பன், போத்தனூர்.

Next Story