நிதி நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை

நிதி நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
கோவை
அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து ரூ.4¾ கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு உத்தரவிட்டது.
நிதி நிறுவனம்
ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோடு நேதாஜி நகரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 50). இவரது மனைவி பராசக்தி, உறவினர்கள் குருசாமி உள்பட 6 பேர் கூட்டாக சேர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு அன்னை இன்போ டெக் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினார்கள்.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செல்லமுத்து இருந்து உள்ளார். இங்கு முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தனர். இதையடுத்து இங்கு ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வுகாலம் முடிந்த பின்னரும் அந்த பணத்தை பொதுமக்களுக்கு திரும்ப கொடுக்கவில்லை.
ரூ.4¾ கோடி மோசடி
இதனால் முதலீடு செய்தவர்கள் இது குறித்து கடந்த 2010-ம் ஆண்டில் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் 118 பேரிடம் ரூ.4 கோடியே 73 லட்சத்து 94 ஆயிரம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து செல்லமுத்து உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடைபெற்று வந்தது.
10 ஆண்டு சிறை
வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட செல்லமுத்துவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.4 கோடியே 75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டும், இந்த அபராத தொகையை பாதிக்கப் பட்ட பொதுமக்களுக்கு வழங்கவும் நீதிபதி ரவி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் மற்ற 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story






