பெங்களூருவில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை


பெங்களூருவில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 4 Oct 2021 8:22 PM GMT (Updated: 4 Oct 2021 8:22 PM GMT)

பெங்களூருவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இந்த மழைக்கு முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. நிவாரண பணிகளை தீவிரப்படுத்த பசவராஜ்பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

திடீரென கனமழை

  கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், அதன் தாக்கம் காரணமாக பெங்களூருவில் கடந்த சில நாட்களாக லேசான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு திடீரென கனமழை பெய்தது.
  ஜெயநகர், ஜே.பி.நகர், மெஜஸ்டிக், விதான சவுதா, ரிச்மண்டு சர்க்கிள், கார்ப்பரேஷன் சர்க்கிள், ரெசிடென்சி ரோடு, லால்பாக், வில்சன் கார்டன், மைசூரு ரோடு, பாபுஜிநகர், ராஜராஜேஸ்வரி நகர், கெங்கேரி உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.

  நகர மக்கள் நன்றாக தூங்கிய நேரத்தில் மழை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த மக்கள் தூக்கத்தை இழந்து வீடுகளில் புகுந்த மழைநீரை வெளியேற்றினர். ஜெயநகர் பகுதியில் ஒரு மரம் நடுரோட்டில் முறிந்து விழுந்தது. அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த காபி கடை உரிமையாளர் நாகராஜ் தன்யா (வயது 73) என்பவர் அந்த மரத்தில் மோதி படுகாயம் அடைந்தார். அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வாகனங்கள் சேதம்

  ஜே.சி.நகர் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து அங்குள்ள வீடுகளில் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மழைநீரில் மூழ்கின. நாகரபாவி பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நின்றன.

  ராஜராஜேஸ்வரிநகரில் சுமார் 15 பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ரமேஷ்நகரில் 12 அடி உயரம் கொண்ட விமான நிலைய சுற்றுச்சுவர் 100 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்தது. இதனால் அந்த சுற்றுச்சுவரை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் சேதம் அடைந்துள்ளன. கோரமங்களா 6-வது பிளாக்கில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. அந்த பகுதிக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

மரங்கள் முறிந்து விழுந்தன

  மல்லேசுவரம், ராஜராஜேஸ்வரிநகர், ராஜாஜிநகர், ஜெயநகர், சுங்கதகட்டே, ஜே.சி.நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. நாகரபாவி பகுதியில் உள்ள கவுரம்மா லே-அவுட்டில் 3 மாடி கட்டிடம் ஒன்று சரிந்த நிலையில் உள்ளது. அந்த கட்டிடம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் பீதியடைந்துள்ளனர். ஸ்ரீராமபுரத்தில் கனமழை பெய்ததால், அங்குள்ள சுரங்க பாலத்தில் இடுப்பு அளவுக்கு மழைநீர் தேங்கியது. பீனியா, ராஜாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மெஜஸ்டிக் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். இருசக்கர வாகனங்கள் தேங்கிய நீரில் மூழ்கின.

  நகரில் ஞானபாரதியில் 98 மில்லி மீட்டர், நாகரபாவியில் 91 மில்லி மீட்டர், ஹம்பிநகரில் 90 மில்லி மீட்டர், நந்தினி லே-அவுட்டில் 78 மில்லி மீட்டர், ஹெக்கனஹள்ளியில் 67½ மில்லி மீட்டர், மாருதிமந்திராவில் 64½ மில்லி மீட்டர், வி.வி.புரத்தில் 58½ மில்லி மீட்டர், ராஜராஜேஸ்வரிநகரில் 53½ மில்லி மீட்டர், தயானந்த்நகரில் 48½ மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பொம்மனஹள்ளி, தாசரஹள்ளி, எலகங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவு

  இந்த மழை குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
  பெங்களூருவில் நேற்று(நேற்று முன்தினம்) இரவு கனமழை பெய்து, தாழ்வான பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் நீர் புகுந்துள்ளது. நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த பணிகளை நான் நேரடியாக கண்காணித்து வருகிறேன். இந்த மழை பாதிப்பின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். மாநகராட்சி தலைமை கமிஷனர், அனைத்து மண்டல கமிஷனர்களுக்கும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக தலைமை கமிஷனருடன் தொடர்பில் உள்ளேன்.

  இந்த பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து மரங்கள் முறிந்து வாகனங்கள் மீது விழுந்துள்ளன. இதனால் அந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. சில பழைய கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும் என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசு கவனித்து வருகிறது. பழைய கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

நிரந்தரமான நடவடிக்கை

  ராஜராஜேஸ்வரிநகரில் அதிகளவு மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான தோட்டக்கலைத்துறை மந்திரி முனிரத்னா, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நிரந்தரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story