ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை செய்யக்கோரி வழக்கு


ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை செய்யக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 5 Oct 2021 2:53 AM IST (Updated: 5 Oct 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகளை செய்யக்கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.

மதுரை,

ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகளை செய்யக்கோரி வழக்கில் மத்திய-மாநில அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.

ரெயில் நிலையம்

மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
நான் மாற்றுத்திறனாளி. அடிக்கடி ரெயில்களில் பயணம் செய்கிறேன். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்றேன். எழும்பூர் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கிடைக்கவில்லை.
இதனால் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியில் செல்வதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனது. ஒரு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் உள்ள ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்ய ரெயில்வே நிர்வாகம் தவறிவிட்டது.

உரிய வசதி இல்லை

மதுரை ரெயில் நிலையத்திலும் இதே அசவுகரியத்தை சந்தித்தேன். அங்கிருந்த போர்ட்டருக்கு ரூ.350 கொடுத்து வீல் சேரில் பயணித்து, ரெயில்நிலையத்தில் இருந்து வெளியில் வந்தேன். கொரோனா தொற்று ஊரடங்கின் காரணமாக பேட்டரி கார்களையும் ரெயில் நிலையங்களில் இயக்குவதில்லை.
ஆனால் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர் உள்ளிட்ட பெரும்பாலான ரெயில்நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். என்னைப்போல ரெயில்களில் பயணம் செய்யும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ரெயில்நிலையங்களில் உரிய வசதிகள் இல்லாமல் அவதிக்கு ஆளாகின்றனர்.

எனவே மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி, ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், டிக்கெட் முன்பதிவு மையங்கள், ரெயில் பெட்டிகள் போன்றவற்றை மேம்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் மாதம் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
1 More update

Next Story