தென்காசியில் நுண் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் தேர்தல் நிகழ்வுகளை கவனமாக கண்காணிக்க அறிவுரை


தென்காசியில் நுண் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் தேர்தல் நிகழ்வுகளை கவனமாக கண்காணிக்க அறிவுரை
x
தினத்தந்தி 4 Oct 2021 9:32 PM GMT (Updated: 4 Oct 2021 9:32 PM GMT)

தேர்தல் நிகழ்வுகளை கவனமாக கண்காணிக்க அறிவுரை

தென்காசி:
தென்காசியில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஏற்பாடு தீவிரம்
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை (புதன்கிழமை) 754 வாக்குப்பதிவு மையங்களிலும், வருகிற 9-ந் தேதி தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 574 வாக்குப்பதிவு மையங்களிலும் மொத்தம் 1,328 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 10,638 வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் பணியாற்றவுள்ளனர். சிரமமின்றி வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 347 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு, இதில் 122 பதற்றமான வாக்குச்சாவடிகளில் நேரடியாக கண்காணிக்க வெப் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளை 109 நுண்பார்வையாளர்கள் கண்காணிக்கிறார்கள். மற்ற அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கோபால சுந்தரராஜ் முன்னிலை வகித்தார். தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள நுண் பார்வையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில,் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் வாக்கு பெட்டிகளை வாக்குப்பதிவிற்கு தயார் செய்வது முதல், வாக்கு பெட்டிகளை மண்டல அலுவலர்களுக்கு திரும்ப வழங்கும் வரை உள்ள அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்து தேர்தல் பார்வையாளர்களுக்கு அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
கண்காணிக்க வேண்டும்
கூட்டத்தில், பார்வையாளர் சங்கர் பேசுகையில், “நுண்பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்தின் கண்கள். நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு முகவர்களையும், வாக்குப்பதிவு நடைமுறைகளையும் கவனமாக கண்காணிக்க வேண்டும்” என்றார். கலெக்டர் கோபால சுந்தரராஜ் பேசுகையில், “வாக்குப்பதிவு மையத்தில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாத அளவில் கண்காணித்து சிறப்புடன் பணியாற்ற வேண்டும்”் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே தென்காசி ஊராட்சி ஒன்றிய வாக்குகள் எண்ணப்படும் குற்றாலம் பராசக்தி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு உள்ளது.

Next Story