இடை தரகர்களை வேரறுப்பது தான் வேளாண் சட்டத்தின் நோக்கம்- பா.ஜனதா இணை ெபாறுப்பாளர் சுதாகர்ரெட்டி பேட்டி


இடை தரகர்களை வேரறுப்பது தான் வேளாண் சட்டத்தின் நோக்கம்- பா.ஜனதா இணை ெபாறுப்பாளர் சுதாகர்ரெட்டி பேட்டி
x
தினத்தந்தி 4 Oct 2021 9:50 PM GMT (Updated: 4 Oct 2021 9:50 PM GMT)

இடைதரகர்களை வேரறுப்பது தான் வேளாண் சட்டத்தின் நோக்கம் என்று பா.ஜனதா இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.

மதுரை,

இடைதரகர்களை வேரறுப்பது தான் வேளாண் சட்டத்தின் நோக்கம் என்று பா.ஜனதா இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.
மதுரை வருகை
நெல்லை, தென்காசி பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வதற்காக பா.ஜ.க. தேசிய துணைத்தலைவரும், தமிழக பா.ஜ.க. இணை பொறுப்பாளருமான சுதாகர் ரெட்டி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் 20 ஆண்டு சமூக சேவையை பாராட்டும் விதமாக சேவா சமர்ப்பன் அபியா திட்டத்தின் கீழ் பிரதமரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை இந்தியா முழுவதும் மக்களுக்கான புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
 உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியே மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். தமிழகத்தில் திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் கோவில்கள் மட்டும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படாமல் உள்ளது.
தர்ணா போராட்டம்
வழிபாட்டுத்தலங்களைத் திறக்க வலியுறுத்தி நாளை மறுநாள் (7-ந்தேதி) பா.ஜ.க. சார்பில் அமைதியான முறையில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. எங்கும் கொரோனா அதிகரிக்கவில்லை.
ஆனால் கொரோனாவை காரணம் காட்டி தி.மு.க. அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்தது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி 7 ஆண்டுகள் பிரதமராகவும், 13 ஆண்டுகள் முதல்-அமைச்சராகவும் பொதுசேவையில் உள்ளார். சுதந்திரத்திற்கு பின் விடுமுறை எடுக்காமல் செயல்படும் ஒரே பிரதமர் மோடி மட்டுமே.
இடைத்தரகர்கள்
மத்திய அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முதல்-அமைச்சர் படத்துடன் பிரதமரின் புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் எந்த திட்டத்திலும் பிரதமரின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதில் எந்தவித அரசியல் காழ்புணர்ச்சியும் இடம்பெறக் கூடாது என கோரிக்கை விடுக்கின்றோம்.
பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. இடைத்தரகர்களை வேரறுப்பதுதான் வேளாண் சட்டத்தில் முக்கிய நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story