ஆயுத பூஜை, மிலாதுநபியை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 6 நாட்கள் விடுமுறை


ஆயுத பூஜை, மிலாதுநபியை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 6 நாட்கள் விடுமுறை
x
தினத்தந்தி 5 Oct 2021 6:33 AM IST (Updated: 5 Oct 2021 6:33 AM IST)
t-max-icont-min-icon

ஆயுதபூஜை, மிலாதுநபியை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஆயுதபூஜை, மிலாதுநபியை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மஞ்சள் ஏலம்
ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்படும் மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து மஞ்சளை மொத்தமாக கொள்முதல் செய்கிறார்கள். புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு மஞ்சள் தரமாக உள்ளதால், வியாபாரிகளும் ஆர்வமாக வந்து மஞ்சளை வாங்குகிறார்கள்.
ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்கள் தவிர மற்ற நாட்களில் ஏலம் நடக்கிறது.
6 நாட்கள் விடுமுறை
இந்தநிலையில் ஆயுதபூஜை, மிலாதுநபியை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு வருகிற 14-ந் தேதி முதல் 6 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறுகையில், “ஆயுதபூஜை, விஜயதசமி, மிலாதுநபி ஆகிய விழாக்கள் தொடர்ச்சியாக வருவதாலும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை காரணமாகவும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி வருகிற 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை மார்க்கெட் செயல்படாது. 20-ந் தேதி முதல் வழக்கம்போல் மஞ்சள் மார்க்கெட்டுகளில் ஏலம் நடைபெறும்”, என்றார்.

Next Story