உத்தனப்பள்ளி அருகே, மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி கைது


உத்தனப்பள்ளி அருகே, மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 5 Oct 2021 2:09 AM GMT (Updated: 5 Oct 2021 2:12 AM GMT)

உத்தனப்பள்ளி அருகே மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை கைது செய்த போலீசார், சிறுமியின் தாயை தாக்கிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள வரகானப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 35). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் 15 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் நரசிம்மனிடம் கேட்டனர். அப்போது நரசிம்மன், அவரது தந்தை சின்னசாமி (60), தாய் லட்சுமி (50), நரசிம்மனின் மனைவி அனிதா (27), உறவினர்கள் அனுமந்தப்பா (56), பவ்யா (27) உள்ளிட்டோர் சிறுமியின் தாயை தாக்கினார்கள்.

இதில் காயம் அடைந்த அவர் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நரசிம்மன் மற்றும் சிறுமியின் தாயை தாக்கிய சின்னசாமி, அனுமந்தப்பா, அனிதா, பவ்யா ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது போக்சோ, ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்பட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story