குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ராஜீவ் காந்தி நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் நபியுல்லா. இவரது மகன் முகமது முஸ்தபா (வயது 12). இவர் நந்திவரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் முகமது முஸ்தபா நந்தீஸ்வரர் கோவில் குளத்தில் மீன் பிடிப்பதற்காக சென்ற போது, 15 அடி ஆழமுள்ள குளத்தில் தவறி விழுந்தார். இதையடுத்து நீரில் மூழ்கிய மாணவன் பரிதாபமாக இறந்தார். இதைப்பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் காஞ்சீபுரம் திருக்காலிமேட்டை சேர்ந்தவர் ஷேக் ஷரீப் (14). இவர் திருக்காலிமேட்டில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் ஷேக் ஷரீப், நண்பர்களுடன் காஞ்சீபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென குளத்தில் மூழ்கிய ஷேக் ஷரீப் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், பயந்து போன சக நண்பர்கள், அங்கிருந்தவர்களின் உதவியுடன் சேற்றில் சிக்கிய சிறுவனை மீட்டனர்.
இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில், அவர்கள் விரைந்து வந்து ஷேக் ஷரீப்பை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், போலீசார் விரைந்து சென்று ஷேக் ஷரீப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story