வளசரவாக்கத்தில் கட்டிடங்களுக்கு அலங்காரம் செய்யும் அலுவலகத்தில் தீ விபத்து


வளசரவாக்கத்தில் கட்டிடங்களுக்கு அலங்காரம் செய்யும் அலுவலகத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 5 Oct 2021 2:45 PM IST (Updated: 5 Oct 2021 2:45 PM IST)
t-max-icont-min-icon

வளசரவாக்கத்தில் கட்டிடங்களுக்கு அலங்காரம் செய்யும் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து

சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்தவர் நரேந்திரன் (வயது 41). இவர், தனியார் அலுவலகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்குள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை இந்த அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், அலுவலகத்தில் எரிந்த தீயை நீண்டநேரம் போராடி அணைத்தனர்.

மின் கசிவு காரணமா?

எனினும் தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த ஏ.சி. எந்திரம், மேஜை, சேர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story