உத்திரமேரூர் அருகே உரிய ஆவணமின்றி வாகனங்களில் கொண்டு சென்ற சேலைகள், அரிசி மூட்டைகள் பறிமுதல்


உத்திரமேரூர் அருகே உரிய ஆவணமின்றி வாகனங்களில் கொண்டு சென்ற சேலைகள், அரிசி மூட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Oct 2021 4:29 PM IST (Updated: 5 Oct 2021 4:29 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே வாகனங்களில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற சேலைகள், அரிசி மூட்டைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும் படையினர்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு மதுபானம், பரிசு பொருட்கள், பணபட்டுவாடா செய்வதை தடுக்க, உத்திரமேரூர் ஒன்றியத்தில் 3 தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் கூட்டுறவு வங்கி சார்பதிவாளர் லட்சுமணன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 25 கிலோ எடையுள்ள 126 அரிசி மூட்டைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பின்னர், லாரியையும் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி லாரி டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

சேலைகள் பறிமுதல்

அதே போல், சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் பறக்கும் படையின் ஒரு குழுவினர் நேற்று முன்தினம் மாலை, உத்திரமேரூர் அடுத்த பென்னலுார் கூட்டு சாலையில், கூட்டுறவு சார்பதிவாளர் லட்சுமணசாமி தலைமையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, உத்திரமேரூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்து தகுந்த ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட, 22 ஆயிரம் மதிப்புள்ள, 200 சேலையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story