தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 Oct 2021 10:56 PM IST (Updated: 5 Oct 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


கழிவுகள் தேங்கி துர்நாற்றம்

கோவை சவுரிபாளையம் இந்திராநகர் பகுதியில் சங்கனூர் ஓடை செல்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் கழிவுகள் அடித்து வரப்பட்டு குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் கழிவுகளை அகற்ற வேண்டும்.
எலிசபெத், சவுரிபாளையம்.

வாகன ஓட்டிகள் அவதி

 பொள்ளாச்சி கோவை ரோடு ஆ.சங்கம்பாளையத்தில் இருந்து ஆர்.பொன்னாபுரம் வழியாக பாலக்காடு ரோட்டை அடையும் வகையில் மேற்கு புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக சாலையில் கற்களை கொட்டி சமப்படுத்தி உள்ளனர். ஆனால் பணிகள் மெதுவாக நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். அத்துடன் விபத்துக் களும் ஏற்படுகின்றன. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
  விஜய், ஆச்சிப்பட்டி

கழிப்பிட வசதி இல்லை

  பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மற்றும் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் பூங்காவில் கழிப்பிட வசதி இல்லை. பழுதடைந்த கழிப்பிடத்தை பராமரிக்காமல் இருப்பதால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
  பிரகாஷ், ஆனைமலை.

கரடு, முரடான சாலை

  ஊட்டி அருகே பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குண்டும், குழியுமான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலையே தெரியாத அளவுக்கு மண் சாலையாக மாறி உள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  மல்லிகா, சாண்டிநல்லா.

பயணிகளுக்கு வசதி

  மசினகுடி பஸ் நிலையத்தில் பயணிகள் அரசு பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். இங்கு பயணிகள் பொதுமக்கள் நிற்பதற்கு போதுமான வசதி இல்லை. பழைய இரும்பு கூடாரத்தின் கீழ் ஒதுங்கி நிற்கின்றனர். இதனால் மழைக்காலத்தில் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர் எனவே பயணிகள் நிற்பதற்கு போதிய வசதி செய்ய வேண்டும்.
  இம்மானுவேல், மசினகுடி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

  கோவை சலீவன் வீதி பிள்ளையாா கோவில் சந்து பகுதியில் பல நாட்களாக சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  திவ்யா, கோவை.

பயணிகள் நிழற்குடை

  ஊட்டி பஸ்நிலையம் அருகே காந்தல் நகர பஸ்நிறுத்தும் இடம் இருக்கிறது. இங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அங்கு உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்.
  ரவி, ஊட்டி.

பயணிகளுக்கு இடையூறு

  சூலூர் அருகே உள்ள கலங்கல் அரசு தொடக்கப்பள்ளி முன்பு பஸ்நிறுத்தம் உள்ளது. இங்கு அமர்ந்து சிலர் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு பயணிகளுக்கு இடையூறு செய்து வருகிறார்கள். இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மணிகண்டன், கலங்கல்.

மாணவர்கள் அவதி

  நீலகிரி மாவட்டம் அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் கனமழை காரணமாக சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் இங்கு படித்து வரும் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மழைநீர் தேங்காதபடி இருக்க வழிவகை செய்ய வேண்டும்.
  சுரேஷ், ஊட்டி.

குடிநீரில் சாக்கடை தண்ணீர்

  கோவை சலீவன் வீதியில் குடிநீரில் சாக்கடை தண்ணீர் கலந்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 6 மாதங்களாக இதுபோன்றுதான் வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சாந்தி, கோவை.

சாலையில் செல்லும் கழிவுநீர்

  கோவை சிங்காநல்லூர் பஸ்நிலையம் எதிரே கக்கன் நகரில் சாக்கடை கழிவுநீர் உடைந்து சாலையில் செல்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  ஈஸ்வரன், சிங்காநல்லூர்.

நிரம்பி வழியும் குப்பைகள்

  கோவை மாநகராட்சி 27-வது வார்டு சின்னவேடம்பட்டி கருப்புசாமி லே-அவுட்டில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் குப்பைகள் நிரம்பி வழிந்த பின்னரும் சுத்தம் செய்யவில்லை. இதனால் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
  பாக்யலட்சுமி, சின்னவேடம்பட்டி.

பல்லாங்குழி சாலை

கோவைப்புதூரில் உள்ள சி.பி.எம். கல்லூரி அருகே சாலை பழுதடைந்து பல்லாங்குழி போன்று காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயங்களுடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
தர்மேந்திரன், கோவைப்புதூர். 
  
  


Next Story