மலைவாழ் மக்களிடம் சப் கலெக்டர் பேச்சுவார்த்தை


மலைவாழ் மக்களிடம் சப் கலெக்டர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 5 Oct 2021 11:11 PM IST (Updated: 5 Oct 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

மலைவாழ் மக்களிடம் சப் கலெக்டர் பேச்சுவார்த்தை

வால்பாறை

வால்பாறை அருகே தெப்பக்குளமேடு பகுதியில் குடியேறிய மலைவாழ் மக்களிடம் சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியது டன் வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க அறிவுரை வழங்கினார்.  

மலைவாழ் மக்கள் 

வால்பாறையில் தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு அருகில் உள்ள கல்லார் ஆதிவாசி பழங்குடியினர் மலைவாழ் கிராமத்தில் 23 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதியில் மண்சரிவு மற்றும் விரிசல் ஏற்பட்டது. 

இதனால் அவர்கள் அங்கிருந்து வேறு இடத்தில் குடியமர்த்தப் பட்டனர். இந்த நிலையில் அவர்கள் தெப்பகுளமேடு என்ற இடத்தில் குடியிருக்க இடம் கேட்டு போராட்டம் நடத்தினார்கள். 

சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை 

இதற்கிடையே அவர்கள்  தெப்பக்குளமேடு பகுதியில் திடீரென்று குடியேறினார்கள். இதைத்தொடர்ந்து கல்லார் மலைவாழ் கிராம மக்களை பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது அவர் கூறும்போது, இப்போது நீங்கள் இருக்கும் இடத்தை உங்களுக்கு முழு உரிமையோடு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  நீங்கள் வனப்பகுதிக்குள் எந்தவித சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால், வனத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

வனத்துறையினர் கண்காணிப்பு 

அப்போது வால்பாறை தாசில்தார் (பொறுப்பு) முத்துக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜய்அமிர்தராஜ், செந்தில்குமார், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் போலீசார், வனத்துறையினர் உடன் இருந்தனர். 

மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் தொடர்ந்து தெப்பக்குளமேடு பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story