தாமிரபரணியில் இருந்து மணல் கடத்த சாலையா?-கலெக்டர் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்துவதற்காக சாலை அமைக்கப்பட்டதா? என்பது குறித்து தூத்துக்குடி கலெக்டர் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்துவதற்காக சாலை அமைக்கப்பட்டதா? என்பது குறித்து தூத்துக்குடி கலெக்டர் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மணல் கடத்த சாலையா?
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரநத்ததைச் சேர்ந்த சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தாமிரபரணி ஆற்றில் இருந்து சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக மாவடிபண்ணை முதல் ஏரல் மேலமங்கலம்குறிச்சி வரை முறைகேடாக மண் சாலை அமைத்து, பல ஆண்டுகளாக மணல் அள்ளி வருகின்றனர்.
இதனால் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதோடு இந்த பகுதியில் ஏராளமான சட்டவிரோத செயல்களும் நடக்கின்றன. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆய்வு
எனவே நிபுணர் குழு அமைத்து ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து புன்னக்காயல் வரை எவ்வளவு மணல் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும், மாவடி பண்ணை முதல் ஏரல் மேலமங்கலம்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள மண் சாலையை அகற்றவும், முறைகேடாக மணலை அள்ளி விற்று வருபவர்கள் மீதும், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
கலெக்டருக்கு உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் புகார் குறித்தும், அவர் தெரிவித்துள்ள இடத்தில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? அங்கு சட்டவிரோத செயல்கள் நடைபெற்றதா? என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை நாளை (7-ந்தேதிக்கு) ஒத்திவைத்தனர்.
========
Related Tags :
Next Story