40 கடைகளை அகற்ற நோட்டீஸ்
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 40 கடைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிழக்கு ராஜ கோபுர பிரகாரத்தில் இருந்த வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததால் இடிந்து விழுந்தது. மேலும் இந்த விபத்தில் அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. இந்த பயங்கர தீ விபத்துக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகள் தான் காரணம் என்று கூறப்பட்டதால் அனைத்து கடைகளையும் அகற்ற கோவில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கியது.அதை எதிர்த்து கடை உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் கோவிலில் இருந்து அகற்றப்படும் கடைகளுக்கு கோவில் நி்ாவாகம் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.அதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் எல்லீஸ் நகர் பகுதியில் கோவில் வாகன நிறுத்துமிடத்தில் அவர்களுக்கு கடைகள் கட்டி கொடுப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையில் கடை உரிமையாளர்கள் மதுரையில் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கோவிலில் மூடப்பட்ட பூக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில் இருந்த பூக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன.இந்த நிலையில் கோவிலில் இருந்த 40 கடைகளை மீண்டும் அகற்ற கடை உரிமையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதில் பூக்கடைகள், தேங்காய் பழம் விற்பனை கடைகள், பேன்சி, வளையல் உள்ளிட்ட அனைத்து கடைகளும் விரைவில் அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் நோட்டீசு வழங்கியதால் கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story