அந்தியூர், சத்தி, கோபி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது் மரங்கள் சாய்ந்தன-மேற்கூரை பறந்தது


அந்தியூர், சத்தி, கோபி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது் மரங்கள் சாய்ந்தன-மேற்கூரை பறந்தது
x
தினத்தந்தி 6 Oct 2021 4:54 AM IST (Updated: 6 Oct 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர், சத்தி, கோபி பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மரங்கள் சாய்ந்தன. மேற்கூரை பறந்தது.

ஈரோடு
அந்தியூர், சத்தி, கோபி பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மரங்கள் சாய்ந்தன. மேற்கூரை பறந்தது. 
வீடுகளுக்குள் தண்ணீர்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக காலை முதல் மாலை வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இரவு 7 மணிக்கு மேல் பலத்த மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. 
அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையில் 1000-த்துக்கும் மேற்பட்ட வாழைகள் அடியோடு சாய்ந்தன. மேலும் ஒரு வீட்டின் சுவர் நனைந்து திடீரென இடிந்து விழுந்தது. சில வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. 
சீரமைப்பு பணிகள்
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று வீடுகளுக்குள் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினார்கள். குடியிருப்புகளை சுற்றி சூழ்ந்திருந்த வெள்ளத்தை பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். 
சுவர் இடிந்து விழுந்த வீட்டுக்கும், தண்ணீர் சூழ்ந்த இடங்களுக்கும் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினார். 
இதேபோல் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரவணன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்தார்கள். 
வரட்டுப்பள்ளம் அணை
நேற்று முன்தினம் இரவு அந்தியூர் பகுதியில் 62 மில்லி மீட்டர் மழையும், அத்தாணி பகுதியில் 65 மில்லி மீட்டர் மழையும், வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 26.2 மில்லிமீட்டர் மழையும் பெய்தது.
வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பெய்த மழையால் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 33.33 அடியாகும். தற்போது 25.92 அடியாக உள்ளது. ஒரு நாள் இரவில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அணை விரைவில் நிரம்பும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள். 
மேற்கூரை பறந்தது
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் 8 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய நிற்காமல் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. 
சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் சத்தி அக்ரஹாரத்தில் குலோப்ஜான் என்பவருடைய வீட்டின் மேற்கூரை பெயர்ந்து பறந்து சென்று விழுந்தது. 
மரங்கள் சாய்ந்தன
சத்தியமங்கலம் பழைய ஆற்று பாலத்திற்கு அருகில் மின் கம்பம் ஒன்று சாய்ந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள மனமகிழ் மன்ற வளாகத்தில் வேரோடு மரம் ஒன்று சாய்ந்தது. 
சத்தி தாசில்தார் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த லாரி  மீது அங்கு இருந்த வாகை மரம் சாய்ந்து விழுந்தது.
சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகத்திற்கு பின்புறம் உள்ள 200 ஆண்டுகள் பழமையான அரச மரம் சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வேருடன் சாய்ந்தது. 2 வீடுகளுக்கு இடையே மரம் விழுந்ததில் ஒரு வீட்டின் முன்பகுதி இடிந்தது. இதுபோல் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. 
கோபி
கோபி மற்றும் அதைச்சுற்றி உள்ள புதுக்கரைபுதூர், பாரியூர், பொலவக் காளிபாளையம், தாசம்பாளையம், ஒத்தக்குதிரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் சூறாவளிக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கன மழையால் புதுக்கரைபுதூர் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவரது தோட்டத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமானது.
நம்பியூர்
 நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான கோசணம், கெட்டிச்செவியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இரவு 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்தது.  நம்பியூர் அருகே உள்ள திருநாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 18) பனியன் கம்பெனி தொழிலாளி. நேற்று இரவு இவருடைய வீட்டின் சுவர் மழையால் நனைந்திருந்தது. அப்போது திடீர் என சுவர் இடிந்து தர்மராஜ் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள். 
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு -4, பெருந்துறை -1.1, கோபி -18.4, தாளவாடி -5, சத்தியமங்கலம் -83, பவானிசாகர் -27.2, பவானி -2.6, கொடுமுடி -3.2, நம்பியூர் -60, சென்னிமலை -13, மொடக்குறிச்சி -18, கவுந்தப்பாடி -13.2, எலந்தகுட்டை மேடு, 6.8, அம்மாபேட்டை -15.4, கொடிவேரி -13.3, குண்டேரி பள்ளம் -46.4, வரட்டுப்பள்ளம் -26.2. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 356.8 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 20.9 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Next Story