கோபி அருகே 2 இடங்களில் ரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியல்


கோபி அருகே 2 இடங்களில் ரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Oct 2021 4:54 AM IST (Updated: 6 Oct 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே 2 இடங்களில் ரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

கடத்தூர்
கோபி அருகே 2 இடங்களில் ரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். 
கொள்முதல் நிைலயங்கள்
கோபி அருகே உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலமாக 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. 
விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள்.  இதற்காக கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் நாள்தோறும் 1000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.  அதாவது ஒரு ஏக்கருக்கு விவசாயிகளிடம் இருந்து 80 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. 
ரோட்டில் கொட்டி போராட்டம்
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக கொள்முதல் நிலையங்களில் ஒரு ஏக்கருக்கு 60 மூட்டை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் எஞ்சிய நெல் மூட்டைகளை பாதுகாத்து வைக்க முடியாமல் அவைகள் தொடர்மழையால் முளைத்து வீணாகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவித்து வந்தார்கள். 
 இதற்கிடையே நேற்று காலை கோபி புதுக்கரைபுதூரில், அந்தியூர் சாலையில் விவசாயிகள் மழையால் முளைத்த நெல் மூட்டைகளுடன் ஒன்று திரண்டார்கள்.  பின்னர் ரோட்டில்  நெல்லை கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விவசாயிகள் வேதனை
இதுபற்றி தகவல் கிடைத்ததும், கோபி தாசில்தார் தியாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம், கொள்முதல் நிலையங்களில் ஒரு ஏக்கருக்கு 80 மூட்டை கொள்முதல் செய்தார்கள். தற்போது 60 மூட்டைகள்தான் கொள்முதல் செய்கிறார்கள். எஞ்சிய நெல் மழையில் முளைத்து வீணாகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. கடன் பட்டு விவசாயம் செய்த நாங்கள் என்ன செய்வது? என்று வேதனைப்பட்டார்கள்.
மற்றொரு இடத்தில்...
இதையடுத்து கொள்முதல் நிலையங்களில் ஒரு ஏக்கருக்கு 80 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படும். மேலும் கூடுதலாக கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தார்கள்.  அதை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள். 
இதே கோரிக்கையை வலியுறுத்தி கோபி கரட்டடிபாளையத்திலும் விவசாயிகள் நெல்லை ரோட்டில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பின்னர் அதிகாரிகள் சமாதானம் செய்து வைத்தார்கள். 
கோபி பகுதியில் விவசாயிகள் 2 இடங்களில் ரோட்டில் நெல்லை கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story