இந்த ஆண்டில் 2-வது முறையாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது- பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு


இந்த ஆண்டில் 2-வது முறையாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது- பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு
x
தினத்தந்தி 6 Oct 2021 4:54 AM IST (Updated: 6 Oct 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் 102 அடியை எட்டியதால் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் 102 அடியை எட்டியதால் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 16 கி.மீ தூரத்திலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகிழக்கில் 36 கி.மீ தூரத்திலும் பவானி ஆறும் மோயாறும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
பாசன வசதி
பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும் இதே அணை நிரம்பிய பின் திறக்கப்படும் உபரி நீரும் பவானி ஆற்றின் மூலம் பவானிசாகர் அணையில் கலக்கிறது. 
மீண்டும் எட்டியது
பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்து பொதுப்பணித்துறையில் வகுக்கப்பட்ட விதியின் படி அக்டோபர் 31 ம் தேதி வரை 102 அடிவரையிலும் நவம்பர் முதல் தேதியில் இருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 102 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதே சமயம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியில் இருந்து குறைந்தது. தற்போது மீண்டும் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் 102 அடியை எட்டியது.
உபரி தண்ணீர் திறப்பு
நேற்று மதியம் 12 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 4,634 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து உபரி நீராக பவானி ஆற்றில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீரும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 4,600 கனஅடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்படும் உபரி தண்ணீர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும் போது பவானி ஆற்றின் மேல் மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் மீண்டும் 2-வது முறையாக 102 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story