குலசேகரன்பட்டினம்; தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தசரா திருவிழா இன்று காலை 9.30 மணிக்கு கோவில் முன்பு இருக்கும் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழாவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை 9.30 மணிக்கு கோவில் முன்பு இருக்கும் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலில் வலம் வருகிறார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான வருகிற 15-ந் தேதி நள்ளிரவில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு நடைபெறுகிறது. இதை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருவிழா நடைபெறும் 12 நாட்களில் வருகிற 7, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் அனுமதி கிடையாது. அதாவது, திருவிழா நடைபெறும் 12 நாட்களில் 5 தினங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. திருவிழாவில் தடை செய்யப்பட்ட 7 நாட்களும் பக்தர்கள் யாரும் கோவில் வளாகம் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதியில் நடமாடக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story