ஈரோடு மாவட்டத்தில் 27 வார்டுகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது


ஈரோடு மாவட்டத்தில் 27 வார்டுகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது
x
தினத்தந்தி 6 Oct 2021 8:43 PM IST (Updated: 6 Oct 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெறும் 27 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் இன்று (வியாழக்கிழமை) ஓய்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெறும் 27 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் இன்று (வியாழக்கிழமை) ஓய்கிறது.
தற்செயல் தேர்தல்
தமிழ்நாட்டில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இத்துடன், ஏற்கனவே தேர்தல் நடத்தப்பட்ட மாவட்டங்களில் காலியாக உள்ள வார்டுகளுக்கும் தற்செயல் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 2-வது கட்ட வாக்குப்பதிவு 9-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த 2-வது கட்ட வாக்குப்பதிவுடன், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 27 வார்டுகளுக்கும் தேர்தல் நடக்கிறது. ஈரோடு மாவட்ட ஊராட்சி வார்டு 5, ஊராட்சி ஒன்றியக்குழு ஈரோடு-4 வது வார்டு, பெருந்துறை 10-வது வார்டு ஆகியவற்றுக்கும் தேர்தல் நடக்கிறது.
ஊராட்சி தலைவர் பதவி
அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட சங்கரபாளையம் ஊராட்சி தலைவர், சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட முகாசி புலவன்பாளையம் ஊராட்சி தலைவர், நம்பியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கூடக்கரை ஊராட்சி தலைவர், பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட கருக்குப்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
இவை தவிர அம்மாபேட்டை ஒன்றியத்தில் பூதப்பாடி ஊராட்சி 4-வது வார்டு, மாணிக்கம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு, முகாசிபுதூர் ஊராட்சி 2-வது வார்டு, சிங்கம்பேட்டை ஊராட்சி 5-வது வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
அந்தியூர் ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சி 15-வது வார்டு, பவானி ஒன்றியம் ஆண்டிக்குளம் ஊராட்சி 3-வது வார்டு, சின்னப்புலியூர் ஊராட்சி 1-வது வார்டு, ஓடத்துறை ஊராட்சி 7-வது வார்டு, ஒரிச்சேரி ஊராட்சி 9-வது வார்டுகளுக்கும், பவானிசாகர் ஒன்றியம் புங்கார் ஊராட்சி 1-வது வார்டு, நல்லூர் ஊராட்சி 1-வது வார்டுக்கும் தேர்தல் நடக்கிறது.
7 பேர் போட்டியின்றி தேர்வு
கொடுமுடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொந்தளம் ஊராட்சி 6-வது வார்டு, குளத்துப்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு, மொடக்குறிச்சி ஒன்றியம் குளூர் ஊராட்சி 2-வது வார்டு, முகாசி அனுமன்பள்ளி ஊராட்சி 4-வது வார்டு, துய்யம்பூந்துறை ஊராட்சி 7-வது வார்டு, நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை ஊராட்சி 6-வது வார்டு, பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி 11-வது வார்டு, டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சியில் 2 மற்றும் 8-வது வார்டு ஆகியவற்றுக்கும் தற்செயல் தேர்தல் நடக்கிறது.
மாவட்ட ஊராட்சி வார்டு 1, ஒன்றியக்குழு வார்டுகள்-2, ஊராட்சி தலைவர் பதவி -4, ஊராட்சி வார்டுகள் 20 என மொத்தம் 27 வார்டுகளுக்கும் 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 20 ஊராட்சி வார்டுகளில் 7 பேர் ஏற்கனவே போட்டியின்றி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 13 வார்டுகளில் 31 பேர் போட்டியில் உள்ளனர்.
4 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கு 15 பேர் போட்டியிடுகிறார்கள். ஒன்றியக்குழு 2 வார்டுகளில் 13 பேர் போட்டியிடுகிறார்கள். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஒரு பதவிக்கு 6 பேர் போட்டியில் உள்ளனர். மொத்தம் 20 வார்டுகளில் தேர்தல் நடக்கிறது. 65 பேர் போட்டியில் உள்ளனர்.
யாருக்கு வெற்றி
தற்போது நடைபெறும் தற்செயல் தேர்தல் ஈரோடு மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 6 பேர் கொண்ட ஈரோடு ஊராட்சியில் ஏற்கனவே தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சரிபலத்தில் இருந்ததால், தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவு பெறாமல் இருந்தது. தற்போது 4-வது வார்டில் தி.மு.க. வெற்றி பெற்றால் அந்த கட்சி தலைவர் பதவியை கைப்பற்றும். இல்லை என்றால் மீண்டும் இழுபறி நிலை நீடிக்கும்.
இதுபோல் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திலும் 10-வது வார்டில் தி.மு.க. வெற்றி பெறுமா, அ.தி.மு.க. வெற்றி பெறுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இங்கு தி.மு.க. அணியில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்காக முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அவர் வீடு வீடாக சென்று தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
பிரசாரம் ஓய்கிறது
9-ந்தேதி தேர்தல் நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) பிரசாரம் ஓய்கிறது.
தேர்தலுக்கு பின்னர் 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு சிங்கம்பட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை ஒன்றியத்துக்கு பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஈரோடு ஒன்றியத்துக்கு ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டி.என்.பாளையம் ஒன்றியத்துக்கு டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சென்னிமலை ஒன்றியத்துக்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நம்பியூர் ஒன்றியத்துக்கு நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அந்தியூர் ஒன்றியத்துக்கு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பவானிசாகர் ஒன்றியத்துக்கு பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பவானி ஒன்றியத்துக்கு பவானி வட்டார சேவை மையம் என 9 மையங்களில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும். 12-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர்.

Next Story