குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
பொள்ளாச்சி
நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் சேதமடைந்ததால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் மழையின் மூலம் நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதற்கிடையில் நீர்வரத்து அதிகரிப்பதை கண்காணித்த வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றனர்.
இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. மேலும் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதற்கிடையில் வனத்துறை அதிகாரிகள் நீர்வீழ்ச்சியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதால் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.இதையடுத்து குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நுழைவு வாயில் மூடப்பட்டது.
வனத்துறையினர் கண்காணிப்பு
மேலும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சோதனை சாவடியில் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்று சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
குரங்கு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறையவில்லை. மேலும் தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு கருதி குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் வரத்து குறைந்ததும் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் சீரமைக்கும் பணி தொடங்கப்படும். அதன்பிறகே சுற்றுலா பயணிகளை மீண்டும் அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story