மகாளய அமாவாசையையொட்டி தடையை மீறி நொய்யல் படித்துறையில் திரண்ட பக்தர்கள்
நொய்யல் படித்துறையில் திரண்ட பக்தர்கள்
பேரூர்
மகாளய அமாவாசையையொட்டி பேரூர் நொய்யல் ஆற்று படித்துறை யில் பக்தர்கள் திரண்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மகாளய அமாவாசை
ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண வழிபாடு செய்தால் அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எனவே அன்றைய நாளில் பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் ஏராளமான பக்தர்கள் வந்து திதி மற்றும் தர்ப்பணம் செய்வார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக மகாளய அமாவாசை வழிபாடுக்கு நொய்யல் படித்துறைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பேரூர் பட்டீசுவரர் கோவிலிலும் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
தடையை மீறிய பக்தர்கள்
இந்த நிலையில் மகாளய அமாவாசை என்பதால் நொய்யல் படித்துறைக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க அங்கு வருவாய்த்துறை யினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்து டன் வழக்கமாக திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் இடங்களில் பக்தர்கள் செல்லாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன.
இருந்தபோதிலும் அதிகாலை 5 மணி முதலே அங்கு பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். திதி செய்யும் இடத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்ததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். சில பக்தர்கள் தடை செய்யப்பட்ட இடங்களுக்கு சென்று வழிபாடு செய்ய முயன்றனர்.
எச்சரித்து அனுப்பினர்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தாசில்தார் ரமேஷ் மற்றும் போலீசார் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இருந்தபோதிலும் பக்தர்கள் தடையை மீறி நொய்யல் படித்துறை அருகே உள்ள பாலத்தின் இருபுறத்திலும் ஆற்றுக்குள் இறங்கி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
சிலர் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையையும், அங்கிருந்த கைவிடப் பட்ட முதியவர்களுக்கு அன்னதான பொட்டலங்களையும் வழங்கினர். பின்னர் அவர்கள் பட்டீசுவரர் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றனர்.
தர்ணா போராட்டம்
ஆனால் அங்கு பக்தர்களுக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால், கோவில் நடை பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் கள் வெளியே நின்று சாமி கும்பிட்டுவிட்டு திரும்பினார்கள்.
இந்த நிலையில் கோவில் முன்பு திரண்ட இந்து முன்னணியினர், பக்தர்கள் வழிபாட்டுக்காக கோவிலை திறக்க வேண்டும் என்றுக்கூறி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story