கலப்பட பனை வெல்லம் விற்பனைக்கு தடை கோரிய வழக்கு


கலப்பட பனை வெல்லம் விற்பனைக்கு தடை கோரிய வழக்கு
x
தினத்தந்தி 7 Oct 2021 1:30 AM IST (Updated: 7 Oct 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

கலப்பட பனை வெல்லம் விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் அரசு தரப்பில் பதில் அளிக்க நீதிபதிகள் காலஅவகாசம் அளித்து உள்ளனர்.

மதுரை, 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பனைமரம் தமிழகத்தின் மாநில மரம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படுகிறது. பனங்கூழ், பனம்பழம், பனைவெல்லம், அதிலிருந்து தயாரிக்கப்படும் பனை கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை மருத்துவ குணம் மிக்கவை.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பனை சார்ந்த தொழில்கள் அதிக அளவில் உள்ளன.
உடன்குடி, வேம்பார் பகுதியில் பனை வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால் பலர் இதனை தவறாக பயன்படுத்தி சர்க்கரை பாகு, சர்க்கரை ஆகியவற்றோடு சில ரசாயனங்களையும் சேர்த்து பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற தோற்றத்தையும் வாசனையையும் ஏற்படுத்தி கலப்பட பொருட்களாக்கி விற்கின்றனர். இந்த கலப்பட பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதை ஏற்படுகிறது. எனவே கலப்பட பனை பொருட்களை விற்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுகுறித்து பதில் அளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை நவம்பர் மாதம் 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story