அந்தியூர் அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது


அந்தியூர் அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2021 8:20 PM GMT (Updated: 6 Oct 2021 8:20 PM GMT)

அந்தியூர் அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் கொன்றதாக போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்தியூர் அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் கொன்றதாக போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பூ வியாபாரி கொலை
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் தமிழன் வீதி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 44). இவர் ஆப்பக்கூடல் பகுதியில் பூக்கடை நடத்தி வந்தார். நாகராஜ் கடந்த மே மாதம் 15-ந் தேதி தலையில் பலத்த ரத்த காயத்துடன் பெருந்தலையூர் பவானி ஆற்றங்கரையோரம் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் நடத்திய விசாரணையில், நாகராஜ் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் தெரியாமல் இருந்து வந்தது.
கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளியை பிடிக்க ஈரோடு மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நாகராஜை கொலை செய்த குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். 
இதற்கிடையில் இந்த கொலை தொடர்பாக ஆப்பக்கூடல் கவுந்தப்பாடி ரோடு பழைய போலீஸ் நிலையம் அருகே வசித்து வரும் சண்முகம் (45) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் நாகராஜை கொலை செய்ததை சண்முகம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சண்முகத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கைது செய்தார். 
பரபரப்பு வாக்குமூலம்
இந்த கொலை தொடர்பாக சண்முகம் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம்  வருமாறு:-
நான் திருமணம் ஆகி ஆப்பக்கூடலில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கூலி வேலைக்கு சென்று வந்தேன். மேலும் நான் ஆப்பக்கூடலில் உள்ள ஒரு மதுக்கடைக்கு சென்று மது குடிப்பேன். அதேபோல் நாகராஜும் அங்கு வந்து மது அருந்துவார். அப்போது அவருக்கும், எனக்கும்  பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நாங்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தோம். ஒன்றாக சேர்ந்து மதுக்கடைக்கு சென்று மது குடிப்போம்.
கொன்றேன்
இந்த நிலையில் நாகராஜ் என்னை அடிக்கடி ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு கட்டாயப்படுத்தினார்.  அதற்கு நான் மறுத்து வந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதனால் நான் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.
சம்பவத்தன்று அவரை பெருந்தலையூர் பவானி ஆற்றங்கரையோரம் அழைத்து சென்றேன். அங்கு வைத்து நான் கல்லை எடுத்து நாகராஜின் தலையில் ஓங்கி அடித்தேன். பின்னர் அவரை ஆற்றில் தள்ளிவிட்டேன். பலத்த காயமடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
கொலை நடந்ததும் நான் அங்கிருந்து தப்பித்து சென்று தலைமறைவாக இருந்து வந்தேன். இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு சண்முகம் அந்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
பின்னர் சண்முகம் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு் ஈரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story