மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை சாத்தப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்


மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை சாத்தப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 6 Oct 2021 8:28 PM GMT (Updated: 6 Oct 2021 8:28 PM GMT)

மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நடை சாத்தப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நடை சாத்தப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பண்ணாரி அம்மன் கோவில்
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பண்டிகை, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்து அம்மனை வழிபட்டு் செல்வார்கள்.
கொரோனா தொற்று காரணமாக இந்த கோவில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடை சாத்தப்படுகிறது. அது போல விசேஷ நாட்களிலும் அதிக அளவில் கூட்டம் வரும் என்பதால் கோவில் நடை சாத்தப்பட்டு் வருகிறது.
பக்தர்கள் வழிபாடு
அதனால் புரட்டாசி மகாளய அமாவாசையான நேற்றும் கோவில் நடை திறக்கப்படவில்லை. ஆனால் பக்தர்கள் காலை 6 மணி முதலே அம்மனை தரிசிக்க கூட்டம் கூட்டமாக வந்தார்கள். வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
கோவில் நடை சாத்தப்பட்டிருந்ததால் அனைவரும் நுழைவுவாயிலுக்கு முன்பாக தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வணங்கினார்கள். மேலும் நேர்த்திக் கடனுக்காக உப்பும் மிளகு கொண்டு வந்திருந்தவர்கள் அதை குண்டத்தில் தூவி அம்மனை வழிபட்டனர்.
கோபி
இதேபோல் மகாளய அமாவாசையை முன்னிட்டு கோபி நகராட்சி பூங்காவில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு் தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் கோபி டவுன் மாதேசியப்பன் வீதியில் உள்ள மாதேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது, இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாரியூர் கொண்டத்து காளியம்மன்
கோபியில் உள்ள சிறிய கோவில்களில் நேற்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர். மேலும் கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில், பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவில் நேற்று நடை சாத்தப்பட்டு இருந்தது. ஆனால் இதுபற்றி தெரியாமல் கோவை, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்னிமலைக்கு வந்தனர்.
அடிவாரத்திலேயே கோவில் பணியாளர்கள் மூலம் முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலை மற்றும் படிக்கட்டு பாதைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்றதும் புகழ் பெற்றதுமான பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது பின்னர் அம்மனுக்கு பச்சை பட்டு அணிந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நடை சாத்தப்பட்டதால் கோவிலுக்கு வெளியே நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
அதேபோல அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில், புதுப்பாளையம் குருநாதசாமி கோவில், பிரம்மதேசம் அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதி ஈஸ்வரன் கோவில்களில் உள்ள ஆற்றின் கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தடை செய்யப்பட்டிருந்தது இதையொட்டி ஆற்றங்கரையோரம் உள்ள கோவில்களில் ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
ஊஞ்சலூர்
   ஊஞ்சலூரில் மிகவும் பழமையான மகாமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று மகாளய அம்மாவாசையையொட்டி இரவு 7 மணி அளவில் சிறப்பு பூஜை நடை பெற்றது. இதற்காக அம்மனுக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தெடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் வெளியே நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story