மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு  தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 2:13 AM IST (Updated: 7 Oct 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

 பெண் தீக்குளிக்க முயற்சி

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாட்சிநகரை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 48). இவருடைய முதல் கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் முத்துமாரி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை புகார் கொடுக்க வந்தார். அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கேனை திறந்து அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் ஓடி வந்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றி அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பணம், நகையை மீட்டு தர வேண்டும்

அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எனது 2-வது கணவர் செல்வராஜ் கேட்டதால் நான் ரூ.2½ லட்சம் மற்றும் 4½ பவுன் நகை ஆகியவற்றை கொடுத்தேன். அவர் அந்த பணத்தையும், நகையையும் அவரது முதல் மனைவி, மகனிடம் கொடுத்து விட்டார். இந்த நிலையில் செல்வராஜ் கடந்த ஏப்ரல் மாதம் இறந்து விட்டார்.
 எனவே எனது பணம் மற்றும் நகையை திரும்ப கொடுக்குமாறு அவரது முதல் மனைவி, மகனிடம் கேட்டேன். அவர்கள் எனது பணத்தையும், நகையையும் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். எனவே தான் தற்கொலை செய்ய முயன்றேன். அதிகாரிகள் எனது நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை

பின்னர் போலீசார் தற்கொலைக்கு முயன்ற முத்துமாரியை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். 
இந்த சம்பவம் கமிஷனர் அலுவலகம் முன்பு நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story