பெங்களூருவில் 30 குழந்தைகளை கடத்தி விற்பனை; தமிழர் உள்பட 5 பேர் கைது


பெங்களூருவில் 30 குழந்தைகளை கடத்தி விற்பனை; தமிழர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2021 3:08 AM IST (Updated: 7 Oct 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 18 குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

2 பெண்கள் கைது

  பெங்களூரு மெஜஸ்டிக் அருகே சிட்டி ரெயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது குழந்தையுடன் சந்தேகப்படும்படியாக சுற்றிய 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினாா்கள். 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்கள்.

  பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த குழந்தையை விற்பனை செய்ய ஒரு பெண் முயன்றதும், மற்றொருவர் குழந்தையை வாங்க வந்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து, 2 பெண்களையும் போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை அதிகாரிகள் மற்றும் போலீசார் மீட்டு இருந்தனர்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்

  இந்த சம்பவம் தொடர்பாக பசவனகுடி மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கைதான 2 பெண்களிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள், மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த ரஞ்சனா தேசாய் (வயது 32), பெங்களூரு வில்சன்கார்டன் பகுதியை சேர்ந்த தேவி (26) என்று தெரிந்தது. இவர்களில் ரஞ்சனா மும்பையில் இருந்து அந்த பெண் குழந்தையை விற்க வந்திருந்ததும், அந்த குழந்தையை வாங்க தேவி வந்திருந்ததும் தெரியவந்தது.

  இவர்கள் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் குழந்தை கடத்தி விற்பனை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஜாலஹள்ளி அருகே மல்லசந்திராவை சேர்ந்த தனலட்சுமி (30), கத்திரி குப்பே அருகே ரங்கப்பா லே-அவுட்டை சேர்ந்த மகேஷ்குமார் 50), தமிழ்நாட்டை சேர்ந்த ஜனார்தன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டாா்கள். இந்த நிலையில், கைதான 5 பேரிடமும் விசாரித்த போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

குடிசைகளில் வசிக்கும்...

  அதாவது கைதான 5 பேரும் பெங்களூரு மற்றும் பிற பகுதிகளில் குடிசைகளில் வசிக்கும் குழந்தைகளை கடத்தி செல்வார்கள். இதுதவிர குழந்தைகள் வளர்க்க முடியாமல் சிரமப்படும் தம்பதியை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து குழந்தையை குறைந்த விலைக்கு வாங்கி சென்று விற்பனை செய்து விடுவார்கள்.

  அத்துடன் ஏதாவது குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை வசதிகள் கொடுப்பதாக வாங்கி சென்று, குறிப்பிட்ட மாதங்கள் தங்கள் வசம் வைத்து சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது.

குழந்தை இல்லாதவர்களுக்கு விற்பனை

  குறிப்பாக குழந்தைகள் இல்லாமல் இருக்கும் தம்பதியை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று கொடுப்பதாக இந்த கும்பல் கூறுவார்கள். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயை பெற்றுக் கொள்வார்கள். ஆனால் வாடகை தாய் மூலமாக அந்த தம்பதிக்கு குழந்தையை கொடுக்காமல், குடிசை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளை கடத்தியும், ஏழை தம்பதியிடம் இருந்து குறைந்த விலைக்கு குழந்தையை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

  இதுவரை 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை 5 பேரும் விற்பனை செய்திருந்தார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 குழந்தைகளை விற்பனை செய்திருந்ததும் தொிய வந்துள்ளது. கைதான 5 பேரும் கொடுத்த தகவலின் பேரில், அவர்கள் விற்பனை செய்திருந்த 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகள், பெங்களூருவில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதான 5 பேர் மீதும் பசவனகுடி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை

  இதுகுறித்து தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "பெங்களூருவில் ஏற்கனவே குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பலை சேர்ந்த ரத்னா கைது செய்யப்பட்டு இருந்தார். அவர், சமீபத்தில் இறந்து விட்டார். அவரது வீட்டில் இருந்து 28 தாய் அட்டைகள் சிக்கியது. அந்த கோணத்தில் விசாரணை நடத்திய போது தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் இல்லாத தம்பதியை குறியாக வைத்து, அவர்களிடம் பணம் பெற்று குழந்தையை விற்று வந்துள்ளனர்.

  இந்த குழந்தை விற்பனையில் ஒரு பெரிய கும்பலே ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 12 குழந்தைகளையும், அவர்களது பெற்றோரை அடையாளம் கண்டு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்பட்ட மற்ற 18 குழந்தைகளை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
  இவ்வாறு ஹரீஷ் பாண்டே கூறினார்.

Next Story