சுங்குவார்சத்திரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3-ம் வகுப்பு மாணவி சாவு


சுங்குவார்சத்திரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3-ம் வகுப்பு மாணவி சாவு
x
தினத்தந்தி 7 Oct 2021 10:16 AM IST (Updated: 7 Oct 2021 10:16 AM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3-ம் வகுப்பு மாணவி பலியானார்.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த பிச்சிவாக்கம், பட்டுமுடையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவர் வீட்டுக்கு அருகே தோட்டம் அமைத்து மல்லிகைப்பூ விளைவித்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு விமலா என்ற மனைவியும், ஸ்ரீமதி (8), தாமரை (5) என 2 மகள்கள் இருந்தனர்.

ஸ்ரீமதி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியல் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை பலராமன் மற்றும் விமலா ஆகியோர் தோட்டத்தில் பூ பறிக்க சென்றனர். அப்போது ஸ்ரீமதியும் அவர்களுடன் பூப்பறிக்க தோட்டதுக்கு வருவதாக கூறி உள்ளார். அவரது பெற்றோர் ஸ்ரீமதியை அழைத்து கொண்டு தோட்டத்துக்கு சென்றனர். ஸ்ரீமதி தனியாக பூ பறித்து கொண்டிருந்தார். அப்போது தோட்டத்துக்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து அவர் மீது விழுந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் அவர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்தார். இதை பார்த்த ஸ்ரீமதியின் பெற்றோர் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மின்சார துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மின்சாரத்தை துண்டித்தனர். தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்துறை ஊழியர்களின் அலட்சியதால் ஒரு சிறுமியின் உயிர் போய்விட்டது.

இனி மேலாவது மின் துறை ஊழியர்கள் அந்த பகுதியில் உள்ள பழுதான மின்கம்பிகளை மாற்றியமைத்தால் இதுபோன்று உயிர் பலி நிகழாமல் தடுக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story