நகை திருடியவருக்கு நகைக்கடைக்காரர் உறுதிமொழி அளித்தால் ஜாமீன்

மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடியவருக்கு நகைக்கடைக்காரர் உறுதிமொழி பத்திரம் அளித்தால் ஜாமீன் வழங்கப்படும் என மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்தது
மதுரை,
மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடியவருக்கு நகைக்கடைக்காரர் உறுதிமொழி பத்திரம் அளித்தால் ஜாமீன் வழங்கப்படும் என மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்தது.
நகை திருட்டு
மதுரையைச் சேர்ந்த காெமடி நடிகர் சூரி. இவரது சகோதரர் வீட்டு திருமண விழா கடந்த மாதம் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அங்கு 10 பவுன் தங்கநகை திருட்டு போனது. இதுதொடர்பாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் வழக்குபதிவு செய்து விசாரித்த போலீசார், இந்த விவகாரத்தில் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்தனர்.
தற்போது சிறையில் இருக்கும் விக்னேஷ், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
உறுதிமொழி பத்திரம்
அப்போது, அரசு வக்கீல் ஆஜராகி, “மனுதாரரின் தந்தை மற்றும் குடும்பத்தினர் நகைக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மனுதாரர் இதேபோல பல்வேறு நிகழ்ச்சிகளில் நகை திருடியதாக ஏற்கனவே வழக்குகள் உள்ளன” என்று தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பு வக்கீல், “மனுதாரரின் தந்தை அல்லது நகைக்கடை நடத்தி வரும் இவரது உறவினர்கள் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க தயாராக உள்ளனர்” என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதி, மனுதாரர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த நகைக்கடைக்காரரோ அல்லது முக்கிய பிரமுகர் ஒருவரோ, இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றச்செயலில் மனுதாரர் ஈடுபடமாட்டார் என உறுதிமொழி பத்திரம் அளித்தால் ஜாமீன் அனுமதிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story






