மதுரை விமானநிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்களை சுங்கத்துறையினர் பிடித்தனர்
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்களை சுங்கத்துறையினர் பிடித்தனர்.
மதுரை விமான நிலையம்
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், தற்போது சர்வதேச விமான சேவை படிப்படியாக நடைபெற்று வருகிறது. அதன் மூலம் மதுரையில் இருந்து துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவை நடைபெறுகிறது.
இந்த நிலையில் துபாயில் இருந்து நேற்று மதுரைக்கு வந்த தனியார் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்க புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து சுங்கப் புலனாய்வு துறை துணை கமிஷனர் ஜெய்சன் பிரவீன் குமார் தலைமையிலான சுங்க புலனாய்வுத்துறை அதிகாரிகள், துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை தனித்தனியாக சோதனை செய்தனர். மேலும் அவர்கள் கொண்டுவந்த உடைமைகளையும் தனித்தனியாக பல்வேறு கட்டங்களாக பரிசோதனை செய்தனர்.
சந்தேகம்
அப்போது அந்த விமானத்தில் வந்திறங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன் மகன் அஜித்குமார் (23 வயது), களஞ்சியம் மகன் பாலமுருககுமார் (27) ஆகியோரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்கள் கொண்டுவந்த உடைமைகளையும் பரிசோதித்தனர். அப்போது அவர்கள் இருவரும் களிமண் போன்ற பொருளுடன் தங்கத்தை கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
ரூ.50 லட்சம்
அவர்கள் இருவரிடமும் இருந்து 231 கிராம், 813 கிராம் என்ற எடையில் கடத்தல் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை விமானத்தில் பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.49 லட்சத்து 84 ஆயிரத்து 735 என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல மாதங்களுக்குப் பிறகு மதுரை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனாவிற்கு பின் படிப்படியாக சர்வதேச விமானசேவை நடைபெறுவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இது கடத்தல்காரர்களுக்கு அதிக வசதியாக இருப்பதாக விமான பயணிகள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story