பண்ணாரி அம்மன் கோவில் முன்பு ஒற்றை யானை அட்டகாசம்; தள்ளுவண்டிகளை சூறையாடியது- பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்


பண்ணாரி அம்மன் கோவில் முன்பு ஒற்றை யானை அட்டகாசம்; தள்ளுவண்டிகளை சூறையாடியது- பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2021 2:48 AM IST (Updated: 8 Oct 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி அம்மன் கோவில் முன்பு அட்டகாசத்தில் ஈடுபட்ட ஒற்றை யானை அங்குள்ள தள்ளுவண்டிகளை சூறையாடியது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவில் முன்பு அட்டகாசத்தில் ஈடுபட்ட ஒற்றை யானை அங்குள்ள தள்ளுவண்டிகளை சூறையாடியது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வந்து சத்தியமங்கலம்-மைசூரு சாலையில் உலா வருகிறது. மேலும் அந்த வழியாக வரும் கரும்பு லாரிகளையும் யானைகள் வழிமறித்து கரும்புகளை ருசித்து தின்கின்றன.
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால் காலையில் இருந்து இரவு வரை ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர். கொரோனா காரணமாக நடை சாத்தப்பட்டு இருந்ததால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று அம்மனை வழிபட்டனர்.
தள்ளுவண்டிகளை சூறையாடியது
இந்த நிலையில் இரவு 8.30 மணி அளவில்  வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை கோவில் நுழைவுவாயிலுக்கு முன்பு வந்து நின்றது. பிளிறியபடி அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது. சத்தம் கேட்டதும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் பழங்கள், சோளக்கதிர்கள் விற்பவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
பின்னர் யானை கோவில் அருகே நிறுத்தப்பட்டு இருந்த தள்ளுவண்டிகளை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் தள்ளுவண்டிகளில் இருந்த பழங்கள், சோளக்கதிர், மாங்காய்கள் ரோட்டில் சிதறின. அவற்றை துதிக்கையால் ஒவ்வொன்றாக எடுத்து யானை ருசித்து தின்றது. உடனே கோவிலுக்கு வந்த பக்தர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் யானையை விரட்ட கூச்சல் போட்டார்கள். ஆனால் யானை அங்கிருந்து நகராமல் நின்று கொண்டே இருந்தது.
காட்டுக்குள் சென்றது
உடனே இதுபற்றி சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு வந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் யானை அங்கிருந்து செல்லவில்லை. சுமார் ½ மணி நேரம் கோவில் நுழைவுவாயில் பகுதியிலேயே சுற்றி திரிந்தது. அதன் பிறகு தானாகவே அங்கிருந்து சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 
இந்த ஒற்றை யானை அடிக்கடி இதுபோன்று கோவில் அமைந்துள்ள பகுதிக்கு வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story