அந்தியூர் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை; ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன


அந்தியூர் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை; ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
x
தினத்தந்தி 8 Oct 2021 2:48 AM IST (Updated: 8 Oct 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

அந்தியூர்
அந்தியூர் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
சூறாவளிக்காற்றுடன் மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.
அதன்படி அந்தியூர் பகுதியில் நேற்று முன்தினம் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது.
வாழைகள் நாசம்
அந்தியூர் சுற்று வட்டாரத்தில் உள்ள சின்னத்தம்பிபாளையம், மறவன்குட்டை, பெரிய ஏரி, நகலூர், தங்கப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. இதில் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தங்கப்பாளையத்தில் குருசாமி என்பவர் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 300-க்கும் மேற்பட்ட நேந்திரம் ரக வாழைகள் சாய்ந்தன.
மேலும் பெருமாபாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம் ஆனது.
அதிகாரிகள் பார்வையிட்டனர்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ‘வாழைகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு எங்கள் பகுதியில் பலத்த சூறாவளிக்்காற்று வீசியது. இதில் வாழைகள் அனைத்தும் சாய்ந்து நாசம் அடைந்தன. இது எங்களை வேதனைப்படுத்தியுள்ளது’ என்றனர்.
மேலும் இதுபற்றி விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அங்கு சென்று சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, இழப்பீட்டு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்று தெரிவித்தனர்.

Next Story