27 வார்டுகளில் தற்செயல் தேர்தல்; பரபரப்பான பிரசாரம் ஓய்ந்தது- நாளை வாக்குப்பதிவு
ஈரோடு மாவட்டத்தில் தற்செயல் தேர்தல் நடைபெறும் 27 வார்டுகளிலும் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுவதையொட்டி இறுதி கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தற்செயல் தேர்தல் நடைபெறும் 27 வார்டுகளிலும் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுவதையொட்டி இறுதி கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
தேர்தல்
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 6-ந் தேதி நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த 2-ம் கட்ட தேர்தலுடன் ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 27 வார்டுகளுக்கு தற்செயல் தேர்தல் நடக்கிறது.
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி-1, ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவி-2, ஊராட்சி தலைவர் பதவி-4, ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி 20 என 27 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 7 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.
பிரசாரம் ஓய்ந்தது
மீதமுள்ள 20 பதவிகளுக்கு 9-ந் தேதி (நாளை) தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பிரசாரம் நடந்து வந்தது. ஊராட்சி தலைவர்கள் பதவி, ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடக்கும் கிராமப்பகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் பகுதிகளில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க. போட்டியிடும் பகுதிகளில் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அமைச்சர் பிரசாரம்
நேற்று இறுதி கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்தது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10-வது வார்டு தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் கே.பி.சாமி, பால் சின்னச்சாமி, சி.பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டனர். இதுபோல் பொன்னாங்காட்டுவலசு காலனி, கூதாம்பி, கருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) பிரசாரம் எதுவும் மேற்கொள்ளக்கூடாது. நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும். 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
Related Tags :
Next Story