எடியூரப்பாவின் உதவியாளர் வீடு உள்பட 50 இடங்களில் வருமான வரி சோதனை


எடியூரப்பாவின் உதவியாளர் வீடு உள்பட 50 இடங்களில் வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 7 Oct 2021 9:28 PM GMT (Updated: 7 Oct 2021 9:28 PM GMT)

நீர்ப்பாசன திட்டங்களில் முறைகேடு புகாரை தொடர்ந்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் உதவியாளரின் வீடு, ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் என 50 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

பெங்களூரு:
 
ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்கள்

  கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா மாற்றப்பட்டு, புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பணியாற்றி வருகிறார். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது துங்கபத்ரா மேல் அணை கட்டுதல் உள்பட ரூ.20 ஆயிரம் கோடிக்கு நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நீர்ப்பாசன திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடியில் முறைகேடு நடந்திருப்பதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும் எடியூரப்பாவின் மகனான விஜயேந்திரா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

  இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மேல்-சபை உறுப்பினர்(எம்.எல்.சி)  எச்.விஸ்வநாத் கூறி இருந்தார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீர்ப்பாசன திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுங்கட்சி எம்.எல்.சி.யான விஸ்வநாத்தே கூறியதால், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்திருந்தனர்.

எடியூரப்பாவின் உதவியாளர்

  இந்த நிலையில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் உதவியாளராக இருக்கும் உமேஷ் வீடு, அலுவலகம் என, அவருக்கு சொந்தமான 4 இடங்களில் நேற்று காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். எடியூரப்பாவுக்கு உதவியாளராக இருக்கும் உமேஷ், அவரது மகனும், பா.ஜனதா துணை தலைவரான விஜயேந்திரா மற்றும் மூத்த மகனும், எம்.பி.யுமான ராகவேந்திரா ஆகியோருக்கும் உதவியாளராக இருந்து வருகிறார்.

  ராகவேந்திரா எம்.பி. பெங்களூருவுக்கு வரும் போது எல்லாம் அவருக்கு தேவையான வேலைகளை உமேஷ் செய்து கொடுத்து வந்திருந்தார். பெங்களூரு ராஜாஜிநகர் பாஷியம் சர்க்கிள் அருகே உமேஷ் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டிற்கு நேற்று காலையில் கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் விசாரணை

  இந்த சோதனை அதிகாலை 5 மணியளவில் இருந்து வீட்டில் தொடங்கியது. சோதனை தொடங்கியம் உமேசிடம் இருந்து செல்போனை முதலில் அதிகாரிகள் வாங்கி கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மேலும் உமேசிடம் வருமான வாித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். அதிகாலையில் இருந்து இரவு வரை சோதனை தொடர்ந்து நடைபெற்றது.

  கர்நாடகத்தில் நடந்த நீர்ப்பாசன திட்டங்களை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து உமேஷ் கமிஷன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த நீர்ப்பாசன திட்டங்களுக்கான டெண்டரில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதும், இதன்பின்னணியில் உமேஷ் இருப்பது பற்றியும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக தெரிகிறது.

300 சதவீதம் சொத்து குவிப்பு

  அத்துடன் உமேஷ் வீட்டு முன்பாக பீதர் மாவட்டம் உம்னாபாத் நீர்ப்பாசன மண்டலத்தில் பணியாற்றும் என்ஜினீயருக்கு வழங்கப்பட்ட, அரசு காரும் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த அரசு காரை உமேஷ் தான் பயன்படுத்தி வந்துள்ளார். இதுபற்றிய தகவல்களையும் வருமான வரித்துறையினர் சேகரித்து இருந்தனர். இதனால் நீர்ப்பாசன திட்டங்களில் நடந்த முறைகேடுகளில் ஒப்பந்ததாரர்களிடம் உமேஷ் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

  அதே நேரத்தில் கடந்த 2 ஆண்டில் மட்டும் உமேசின் சொத்து 300 சதவீதத்திற்கு அதிகரித்து பற்றியும் வருமானவரித் துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதாவது பெங்களூரு பாஷியம் சர்க்கிளில் உமேஷ் வாடகை வீட்டில் வசித்து வந்தாலும், அவருக்கு சொந்தமாக பாகலகுன்டே அருகே பெரிய பங்களா வீடு இருப்பதும் தெரிந்தது. இதுதவிர நெலமங்களாவில் வீட்டுமனை, பி.டி.ஏ. மூலமாக பெறப்பட்ட வீட்டுமனைகள் இருப்பதும், சககாரநகரில் புதிதாக வீடு கட்டி வருவதும் தெரியவந்தது.

கணக்கு தணிக்கை அதிகாரிகள்

  இதனால் எடியூரப்பாவின் உதவியாளராக இருந்து கொண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதுடன், நீர்ப்பாசன திட்டங்களில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் உமேசுக்கு கைமாறி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையின் போது உமேஷ் வீட்டில் இருந்து சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள், 2 பெரிய பைகள், ஒரு சூட்கேஸ் பெட்டியை கைப்பற்றி வருமான வரித்துறையினர் எடுத்து சென்றிருந்தனர்.

  இந்த நிலையில், நீர்ப்பாசன துறையில் கணக்கு தணிக்கை அதிகாரிகளாக இருந்து வரும் லட்சுமிகாந்த், அமலா ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. அதாவது லட்சுமிகாந்திற்கு சொந்தமான பெங்களூரு வித்யாரண்யபுரா, மான்யதா டெக் பார்க் அருகே உள்ள வீடு, அலுவலகங்களிலும், ஹெக்டேநகரில் உள்ள அதிகாரி அமலாவுக்கு சொந்தமான வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை

  இதுதவிர நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் சிமெண்டு, இரும்பு கம்பிகளை வாங்கும் ராகுல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், அவற்றின் உரிமையாளருக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.

  அதிகாரி அமலா வீட்டில் இருந்து தங்க நகைகள், வைர நகைகள், வெள்ளி பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருந்தார்கள். லட்சுமி காந்த் வீட்டில் இருந்தும் நகை, பணம் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோல், ஒப்பந்ததாரரான சீனிவாசுக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள வீடு, கொப்பல் மாவட்டம் கங்காவதியில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

அரசியலில் பரபரப்பு

  கர்நாடகம் மற்றும் கோவா மண்டலத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரை பெங்களூரு உள்பட பல மாவட்டங்களில் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஒட்டு மொத்தமாக எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது செயல்படுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது உதவியாளர், கணக்கு தணிக்கை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், தொழில்அதிபர்களுக்கு சொந்தமான 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

  எடியூரப்பாவின் உதவியாளர் வீட்டில் அரசியல் காரணங்களுக்காக சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.எடியூரப்பாவின் உதவியாளர் வீட்டில் நடந்த இந்த வருமான வரித்துறை சோதனை கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடியூரப்பா, விஜயேந்திராவுக்கு கடிவாளம் போட சோதனை

எடியூரப்பா, முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், கர்நாடக பா.ஜனதாவில் அவர் இன்னும் பலம் வாய்ந்த தலைவராகவே இருந்து வருகிறார். அதுபோல், தனது மகன் விஜயேந்திராவையும் கட்சியில் முக்கிய தலைவராக்க எடியூரப்பா முயற்சித்து வருகிறார். எடியூரப்பா, விஜயேந்திராவுக்கு கடிவாளம் போடுவதற்காக, அவரது உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. 

அதாவது நேரடியாக எடியூரப்பா, விஜயேந்திரா வீடுகளில் சோதனை நடத்தினால், கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலும், உதவியாளர் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் சிக்கினால், அதன்மூலம் எடியூரப்பாவுக்கும், விஜயேந்திராவுக்கும் கடிவாளம் போட திட்டமிட்டு இந்த சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறியுள்ளன.


120 சொகுசு கார்களில் வந்த வருமானவரித்துறையினர்


பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தார்கள். இந்த சோதனையில் கர்நாடகம் மற்றும் கோவா மண்டலத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தார்கள். ஒப்பந்ததாரர்கள், தொழில்அதிபர்கள், பிறரின் வீடுகளில் சோதனை நடத்துவதற்காக பெங்களூருவில் 120 சொகுசு வாடகை கார்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பதிவு செய்திருந்தனர். அந்த வாடகை கார்களில் சென்று தான் அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பசவராஜ் பொம்மைக்கும் உதவியாளர்?

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் உதவியாளரான உமேஷ், தற்போது முதல்-மந்திரியாக இருக்கும் பசவராஜ் பொம்மைக்கும் உதவியாளர் தான் என்று கடந்த ஆகஸ்டு மாதம் அரசு உத்தரவிட்டு இருந்தது. அதாவது முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த பின்பு, பசவராஜ் பொம்மைக்கும் உமேஷ் உதவியாளராக தொடருவார் என்று அரசு அறிவித்திருந்தது. 

ஆனால் பசவராஜ் பொம்மைக்கு உதவியாளராக உமேஷ் இருக்கவில்லை. பெயரளவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், எடியூரப்பாவுக்கே அவர் உதவியாளராக இருந்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பஸ் கண்டக்டராக இருந்து.....

பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு உள்ளாகி இருக்கும் உமேஷ், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்தே உதவியாளராக இருந்து வருகிறார். சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த உமேஷ், பெங்களூருவில் முதலில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். அதன்பிறகு, 2008-ம் ஆண்டு முதல் முறையாக எடியூரப்பா முதல்-மந்திரி ஆன போது, அவரிடம் உதவியாளராக பணிக்கு சேர்ந்திருந்தார். 

எடியூரப்பா முதல்-மந்திரியாக இருக்கும் போதெல்லாம் முக்கியமான ஆவணங்களில் கையெழுத்து பெறுவது, ஆவணங்களை இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை உமேஷ் கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக விஜயேந்திராவுக்கும் உமேஷ் உதவியாளராக இருந்து வந்துள்ளார். சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து முன்னாள் முதல்-மந்திரியின் உதவியாளராக உயர்ந்த உமேஷ் பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பதால், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story