நெல்லை, தென்காசியில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 9 ஒன்றியங்களில் பிரசாரம் ஓய்ந்தது நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு


நெல்லை, தென்காசியில்    2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 9 ஒன்றியங்களில் பிரசாரம் ஓய்ந்தது நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 7 Oct 2021 10:24 PM GMT (Updated: 7 Oct 2021 10:24 PM GMT)

நெல்லை, தென்காசியில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்

நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள 9 ஒன்றியங்களில் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. இங்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
2-வது கட்ட தேர்தல்
நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், பாப்பாக்குடி, சேரன்மாதேவி, அம்பை ஆகிய 5 ஒன்றியங்களிலும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களிலும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக மீதமுள்ள 9 ஒன்றியங்களில் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய 4 ஒன்றியங்களிலும், தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளம் ஆகிய 5 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
பிரசாரம் ஓய்ந்தது
இதையொட்டி கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். கிராம பகுதிகளில் வேட்பாளர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
தேர்தல் நாளில் வெளியூர்காரர்கள் வாக்குப்பதிவுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்றும், அவர்கள் உடனே வெளியேற வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
போலீசார் சோதனை
இதையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி நேற்று மாலை போலீசார் 4 ஒன்றிய பகுதிகளிலும் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, தேர்தல் பணிக்காக தங்கி இருந்த வெளியூர்காரர்களை வெளியேறுமாறு கூறினார்கள். தேர்தல் நாளில் வாக்குச்சாவடி பகுதியில் வெளியூர்காரர்கள் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
அடையாள அட்டை
இதற்கிடையே, நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கு தேவையான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களுக்கு ஒன்றிய அலுவலகங்களில் நேற்று அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதேபோல் தேர்தல் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், ஊழியர்களுக்கு தேர்தல் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பணி ஆணை, அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படுகிறது.
பணி ஒதுக்கீடு
அவர்கள் எந்த வாக்குச்சாவடியில் பணிபுரிய வேண்டும் என்பதை தேர்வு செய்வதற்கு கணினியில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் ஊழியர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன், கலெக்டர் விஷ்ணு ஆகியோர் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.
இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் தேர்தல் பார்வையாளர் சங்கர், கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலையில் வாக்குச்சாவடிகளுக்கு ஊழியர்களை தேர்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
அதன்படி, இந்த 9 ஒன்றியங்களுக்கும் இன்று ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு உரிய வாக்குச்சாவடி பணி ஆணை வழங்கப்படுகிறது.
ஓட்டுப்பெட்டிகள்
நெல்லை மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் மொத்தம் 567 வாக்குச்சாவடிகளும், தென்காசி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் 574 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கு பயன்படுத்தப்படும் ஓட்டுப்பெட்டிகள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இன்று மண்டல அதிகாரிகள் வசம் அவை ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் தங்களது லாரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று மாலை அந்தந்த வாக்குச்சாவடிக்கு எடுத்துச்சென்று, வாக்குப்பதிவு அலுவலரிடம் ஒப்படைக்கிறார்கள்.
மேலும், தேர்தல் ஆவணங்களையும், வாக்குச்சீட்டுகளையும் வழங்குகிறார்கள். இதுதவிர கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கும் வகையில் வாக்காளர்களுக்கு தலா 1 கையுறை, கிருமி நாசினி உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருத்துவ பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன.

Next Story