குன்றத்தூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.2 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கின


குன்றத்தூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.2 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கின
x
தினத்தந்தி 8 Oct 2021 12:21 PM IST (Updated: 8 Oct 2021 12:21 PM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.2 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கின.

பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவிலுள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து நுண்ணறிவு பிரிவின் உதவி வன பாதுகாவலர் மகேந்திரன், சென்னை வன காவல் நிலையத்தின் வன சரக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது அங்கு பூட்டப்பட்டு இருந்த குடோனின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 2 டன் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் கோணிப்பையால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான குடோனை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மதுரவாயலை சேர்ந்த அமீர் என்பவர் மெத்தைகள் தயாரித்து ஏற்றுமதி செய்வதற்காக வாடகைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாக அமீர் வாடகை தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து 2 டன் செம்மரக்கட்டைகள், கட்டைகளை அறுக்க பயன்படுத்தும் எந்திரம், எடை எந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.2 கோடி வரை இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கூண்டுக்குள் வளர்க்கப்பட்டிருந்த இந்திய கிளிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு சரணாலயத்தில் ஒப்படைத்தனர். கிளியை கூண்டுக்குள் வளர்த்த நபர் மீது வழக்குப்பதிவு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story