நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு


நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு
x
தினத்தந்தி 8 Oct 2021 8:31 PM IST (Updated: 8 Oct 2021 8:31 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சங்க தேர்தல் நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனுவும் கொடுத்தனர்

ஈரோட்டில் நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சங்க தேர்தல் நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனுவும் கொடுத்தனர்
சங்க தேர்தல்
ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக காய்கறி மாா்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் சங்கம் உருவாக்கி அதில் 807 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக சங்க தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதாகவும், உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வியாபாரிகளில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே சங்க நிர்வாகிகளுக்கு வீட்டுமனை நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வியாபாரியிடமும் ரூ.70 ஆயிரம் பெற்றுக்கொண்டு நிலம் வழங்கப்படாமல் உள்ளதால் நிலம் வழங்கும் வரை தற்போதைய நிர்வாகிகளே தொடர வேண்டும் என்று மற்றொரு பிரிவு வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கடை அடைப்பு போராட்டம்
இந்த நிலையில் சங்க தேர்தலை நடத்த வேண்டும், சுங்க கட்டணம் வசூலை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகளில் ஒரு பிரிவினர் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்கெட்டில் மொத்தமுள்ள 807 கடைகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தது. இரு பிரிவுகளாக வியாபாரிகள் உள்ளதால் கடையடைப்பு போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருக்க ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மார்க்கெட் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
இதற்கிடையில், ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
எங்களுடைய சங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு பெற்ற சங்கம் ஆகும். கடைசியாக சங்க தேர்தல் கடந்த 2014-ம் ஆண்டு நடத்தப்பட்டது. பொறுப்பாளர்கள் பதவி காலம் 2019-ம் ஆண்டுடன் முடிவடைந்தது.
அனுமதி மறுப்பு
இதைத்தொடர்ந்து எங்கள் சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி உறுப்பினர்கள் கடைகளுக்கு சென்று அவர்களின் கையொப்பம் பெற்று தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று (அதாவது நேற்று) தேர்தல் நடத்த திட்டமிட்டு இருந்தோம். இவை அனைத்திற்கும் போலீஸ் துறையினர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அனுமதி மறுத்து விட்டனர்.
முன்னாள் பொறுப்பாளர்கள், குத்தகை தாரர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் தூண்டுதலின் பேரில் 4 உறுப்பினர்கள் நிலப்பிரச்சினை இருக்கிறது. அது முடிந்த பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என புகார் அளித்துள்ளதாக போலீஸ் துறையினர் கூறி வருகின்றனர்.
புதிய பொறுப்பாளர்கள்
807 பேர் உறுப்பினர்களாக கொண்ட எங்களது சங்கத்தில் 370 பேர் மட்டுமே ரூ.50 ஆயிரம் வீதம் செலுத்தி உள்ளனர். அனைவரும் தேர்தல் நடத்த முழு சம்மதம் தெரிவித்து உள்ளனர். எனினும் குத்தகைதாரர்கள் தொடர்ந்து எங்களது தேர்தல் விஷயத்தில் குறுக்கீடு செய்து வருகிறார்கள்.
எனவே தாங்கள் குத்தகைதாரர்கள் மற்றும் போலீஸ் துறையினர் குறுக்கீடுகள் ஏதும் இன்றி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி எங்களது புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

Next Story