கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் ஈரோடு குடும்ப பெண்கள் வேண்டுகோள்


கியாஸ் விலை உயர்வை  திரும்ப பெற வேண்டும் ஈரோடு குடும்ப பெண்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 Oct 2021 8:36 PM IST (Updated: 8 Oct 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ள நிலையில் பொதுமக்களை சிரமப்படுத்தும் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று ஈரோடு குடும்ப பெண்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ள நிலையில் பொதுமக்களை சிரமப்படுத்தும் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று ஈரோடு குடும்ப பெண்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
கியாஸ் விலை உயர்வு
கொரோனா பெருந்தொற்றில் இருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டு வராத நிலை உள்ளது. வேலை இழப்பு ஏற்பட்டவர்கள் குடும்பத்தை நடத்தவே சிரமம் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் பொதுமக்கள் எதிர்பாராத வகையில் மத்திய அரசு சமையல் கியாஸ் விலையை ரூ.15 உயர்த்தி உள்ளது. இது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் வாடி வரும் நிலையிலும் மத்திய அரசு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை ஏற்றி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஈரோடு மாவட்ட பெண்கள் சிலர் மத்திய அரசு சமையல் கியாஸ்விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-
கவுரி
ஈரோடு அருகே உள்ள காலிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த கவுரி (வயது 40) என்ற பெண் கூறியதாவது:-
நான் முதன் முதலாக கியாஸ் சிலிண்டர் வாங்கும்போது அதன் விலை ரூ.400 ஆக இருந்தது. படிப்படியாக அதன் விலை உயர்ந்து தற்போது ரூ.1000-த்தை நெருங்கி விட்டது. நான் வீட்டில் தையல் எந்திரம் வைத்து டெய்லரிங் வேலை செய்து வருகிறேன். அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். இப்படி கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே போனால் என்னால் கியாஸ் அடுப்பில் சமைக்க முடியாத நிலை ஏற்படும். கியாஸ் விலை உயர்வால் உணவுக்கான பொருட்கள் மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதையும் தவிர்க்கவேண்டியது உள்ளது. எங்களைப்போன்ற ஏழை மக்களுக்கு கியாஸ் சிலிண்டா் விலை உயர்வு மிகப்பெரிய பாரமாகும். எனவே உடனடியாக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனிதா
ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்த அனிதா (39) என்ற பெண் கூறியதாவது:-
எனது கணவர் தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். ஆனால், கொரோனா பாதிப்புக்கு பின்னர் தறிப்பட்டறைகளில் வேலை இல்லாமல் மூடி வருகிறார்கள். வாரத்துக்கு ஒரு நாள் அல்லது 2 நாட்கள் மட்டுமே அவருக்கு வேலை இருக்கிறது. நான் ஒரு டெய்லரிங் கடையில் கூலி வேலைக்கு செல்கிறேன். வேலைக்கு செல்ல வாகனத்துக்கு பெட்ரோல் போட வேண்டும். குழந்தைகள் படிப்பு செலவு, எங்கள் சாப்பாட்டு செலவு என்று எனது ஒரு கூலியில் குடும்பத்தை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில கியாஸ் விலை உயர்வு என்பது மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக கியாஸ், பெட்ரோல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். வேலைவாய்ப்பு இழந்து வருவாய் பற்றாக்குறை உள்ள நிலையில் ஏழை மக்களைப்பற்றி சிறிதும் அக்கரை இன்றி உயர்த்தப்பட்டு உள்ள கியாஸ் விலையை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிஷா
ஈரோட்டில் தனியார் கடையில் வேலை பார்த்து வரும் நிஷா (29) என்ற பெண் கூறியதாவது:-
சமையல் கியாஸ் விலை உயர்வு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு கியாஸ் மிக அத்தியாவசியமாகும். சிறிய வீடாக இருந்தாலும் வீடு வாடகைக்கு செல்லும்போதே கியாஸ் சிலிண்டர் இருக்கிறதா என்று கேட்டுத்தான் வீடு தருகிறார்கள். எனவே வாடகை வீட்டில் இருக்கும் ஏழைகள் மண்எண்ணெய் ஸ்டவ், விறகு அடுப்பு ஆகியவை பயன்படுத்தவே முடியாது. கொரோனாவுக்கு பிறகு கடுமையான வேலை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆண்கள் செய்து வந்த பல வேலை நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. தறி உள்ளிட்ட வேலைகள் அவ்வப்போது கிடைத்துவருகிறது. இந்த நிலையில் கியாஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஏழைகளை கடுமையாக பாதிப்பதால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெய்பானி
கோபி கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெய்பானி (60) என்ற பெண் கூறியதாவது:-
நான் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறேன். எனது கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலை எதுவும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். பீடி சுற்றி வரும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 75 ரூபாய் வரை சிலிண்டர் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் ரூ.15 கூடுதலாக உயர்த்தி இன்னும் பெரும் பாதிப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. எங்களைப்போன்ற ஏழைகள் தினமும் கிடைக்கும் கூலியை பெட்ரோலுக்கும், கியாசுக்குமே செலவழிக்க வேண்டியது உள்ளது. எங்களுக்கு விடிவு காலம் வரவேண்டும் என்றால் கியாஸ் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story