நாளை நடக்கும் முகாமில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு


நாளை நடக்கும் முகாமில்  தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 8 Oct 2021 5:18 PM GMT (Updated: 8 Oct 2021 5:18 PM GMT)

பவானி தாலுகாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் முகாமில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர்.

பவானி தாலுகாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் முகாமில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர்.
தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி போடும் முகாம் நடந்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து 5-வது மெகா தடுப்பூசி போடும் முகாம் ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
பவானி தாலுகா பகுதியில் கடந்த 4 முறை நடந்த முகாமில் அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் வருவாய்த்துறையினர் பரிசுகளை வழங்கினார்கள்.
பரிசு
அதன்படி பவானி தாலுகாவில் நாளை நடக்கும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போடுபவர்களுக்கு வருவாய்த்துறையினர் பரிசுகளை அறிவித்துள்ளனர். இதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பவானி தாசில்தார் முத்கிருஷ்ணன் முதல் பரிசாக ரூ.1,000 மதிப்புள்ள பட்டாசு கிப்ட் பாக்சுகள் 5 பேருக்கும், 2-ம் பரிசாக 100 பேருக்கு பெரிய அளவிலான குடையும் வழங்குகிறார்.
இதுகுறித்து தாசில்தார் கூறும்போது, ‘ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தன்னார்வலர்களிடமிருந்து பரிசு பெற்று வழங்கப்படுகிறது. அம்மாபேட்டை மற்றும் சின்னபுலியூர் பகுதிகளில் தற்செயல் தேர்தல் நடைபெறுவதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தடுப்பூசி போட்டு்க்கொள்ளலாம். ஆனால் பரிசுகள் வழங்கப்பட மாட்டாது. தாலுகா அலுவலக பகுதியில் உள்ள அனைத்து மக்களும் தடுப்பூசி மையங்களில் வந்து கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்றார்.

Next Story