திம்பம் மலைப்பகுதியில் தொடர் மழையால் தோன்றிய திடீர் அருவிகள்
திம்பம் மலைப்பகுதியில் தொடர் மழையால் திடீர் அருவிகள் தோன்றின.
தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான குளம், குட்டைகள் நிரம்பிவிட்டன. தலமலை, திம்பம், ராமரணை, காளிதிம்பம், பெஜலட்டி போன்ற வனக்கிராமங்களில் சில வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக காய்ந்து கிடந்த வனப்பகுதி பச்சைப்பசேலென மாறியுள்ளது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுத்து வருகின்றனர்.
நண்பகலில் கூட வெண்மேகங்கள் மலைமுகடுகளை சூழ்ந்து உரசியபடி செல்வது காண்போர் கண்களுக்கு விருந்தாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையும் திம்பம், ஆசனூர், பெஜலட்டி பகுதியில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை கொட்டியது. தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இதனால் மலைப்பாதையில் பயணிப்பவர்கள் அருவிகளில் விழும் வெண்நுரையுடன் கூடிய நீரை நின்று ரசித்தபடி செல்கின்றனர். அருவியில் கொட்டும் நீர் ஐஸ் போல் குளிர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் கலந்து வருவதால் குற்றாலத்தில் உள்ள நீருக்கு இணையாக உள்ளது என மலைகிராம மக்கள் கூறுகின்றனர். இலைகள் உதிர்ந்து வறண்டு கிடந்த சருகாக காணப்பட்ட வனப்பகுதியானது தற்போது எங்கு பார்த்தாலும் பச்சைகம்பளம் போர்த்தியபடி மரங்கள் தெரிகின்றன.
Related Tags :
Next Story