பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2021 5:49 PM GMT (Updated: 8 Oct 2021 5:49 PM GMT)

செல்போன் பார்க்க பெற்றோர் அனுமதிக்காததால் ஈரோட்டில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செல்போன் பார்க்க பெற்றோர் அனுமதிக்காததால் ஈரோட்டில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-1 மாணவர்
ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 15). இவர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமல் இருந்தது. எனினும் மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக மோகன்ராஜுக்கு அவருடைய தந்தை செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.
தூக்குப்போட்டு...
இந்த நிலையில் தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எனினும் மோகன்ராஜ் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி செல்போனையே பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதனால் அவருடைய தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு மோகன்ராஜிடம் இருந்து செல்போனை பிடுங்கி உள்ளார். இதில் மனவேதனை அடைந்த மோகன்ராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
சாவு
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மோகன்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story