தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் கைதிகள் எத்தனை பேர்?-அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் கைதிகள் எத்தனை பேர்? என்பதை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை,
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த பதிபூரணம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதில் அவர் படுகாயம் அடைந்ததாகவும், சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்ததாகவும் கூறி, கடந்த 1994-ம் ஆண்டு செங்கோட்டை போலீசார் என் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் நெல்லை மாவட்ட கோர்ட்டு எனக்கு ஆயுள் தண்டனை விதித்தது. சாட்சிகளை முறையாக விசாரிக்காமல் எனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இயல்பான சந்தேகங்களுக்கு கூட நியாயமான விளக்கம் அளிக்கப்படாமல் தவறுதலாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும், அப்பீல் மனு நிலுவையில் இருக்கும் வரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரை போல மேல்முறையீடு செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய சட்டப்பணிகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு ஆகியோர் விசாரித்தனர். அப்போது சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழக சிறைகளில் 3500-க்கும் மேற்பட்டவர்கள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இவர்களில் 552 பேர் இதுவரை தங்களுக்கு விதித்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், அவர்களில் எத்தனை பேர் மேல்முறையீடு செய்ய விரும்புகிறார்கள் என்று அறிந்து, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story