புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Oct 2021 1:54 AM IST (Updated: 9 Oct 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-

மக்கள் அவதி 

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ெரயில்வே கேட் பகுதியை கடந்த மூன்று நாட்களாக பகல் நேரங்களில் அடைத்து வைத்து பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கேட்டை அடைத்து வைப்பதால் மக்கள் மிகவும் அவதிப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாடிப்பட்டி மற்றும் நகரி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சோழவந்தான் நகருக்குள் வர 10 கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டியுள்ளது. எனவே பராமரிப்பு பணிகளை இரவு நேரங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.   
கவுரிநாதன், வாடிப்பட்டி.
தொல்லை தரும் நாய்கள் 
ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடி-ஆர்.எஸ்.மங்கலம் அடுத்த சிறு பாலையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவைகள் சாலைகளில் ஆங்காங்கே சுற்றி திரிவதாலும், படுத்து கிடப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ராஜா, இளையான்குடி. 
தேங்்கி நிற்கும் கழிவுநீர் 
மதுரை அவனியாபுரம் பராசக்தி நகர் மெயின் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. குண்டும், குழியுமான இந்த சாலையில் ஆங்காங்கே சாக்கடை கழிவுநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் காணப்படுகிறது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி சாலை வசதி அமைக்கவும், கழிவு நீர் தேங்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
விக்னேஷ், பராசக்தி நகர், மதுரை. 
குவிந்து கிடக்கும் குப்பை 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா சின்னவள்ளிகுளம் கிராமத்தில் பள்ளியின் அருகில் சாலையோரத்தில் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து செல்கின்றனர். இதனால் இந்த வழியாக நடந்து செல்பவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பாரத்ராஜா, அருப்புக்கோட்ைட.
சாலை சீரமைக்கப்படுமா?  
மதுரை தத்தனேரி 9-வது வார்டு காமாட்சிநகர் தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால் இப்பணி முடிவடைந்தும் இதுநாள் வரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும். 
குமார், மதுரை. 
வாகன ஓட்டிகள் அவதி 
சிவகங்கை நகரில் உள்ள சில சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.
சிங்காரம், சிவகங்கை. 
புதிய பாலம் தேவை 
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாவினிப்பட்டி ஊராட்சி பகுதியான நா.கோவில்பட்டியில் சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் அந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் தற்போது ஆங்காங்கே உடைந்த நிலையில் காணப்படுகிறது. எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும். 
விஜய், மதுரை. 
குண்டும், குழியுமான சாலை 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாரியம்மன் கோவில் பழைய விருதுநகர் சாலையானது மிகவும் மோசமாக உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குண்டும், குழியுமான இந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?
மகாதேவன், சிவகாசி. 
பஸ்கள் நிற்குமா? 
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேனூர் ஊராட்சியை சார்ந்த டபேதார் சந்தை என்னும் கிராமத்தில் பஸ் நிறுத்தம் இல்லை. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பல கிலோ மீட்டர் நடந்து சென்று அருகில் உள்ள ஊர்களில் பஸ் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, இந்த கிராமத்தில் பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கவுதம், டபேதார் சந்தை.

Next Story