சாத்தான்குளம் சம்பவம் நடந்ததற்கு முந்தையநாள் நடந்தது என்ன?
சாத்தான்குளம் சம்பவம் நடந்ததற்கு முந்தையநாள் நடந்தது பற்றி மதுரை கோர்ட்டில் வியாபாரி பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார்.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்குள்ள போலீஸ்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்து இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரித்து, குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்டகோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்தநிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி பத்மநாபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதான போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஜெயராஜ் நடத்தி வந்த கடையின் அருகே கடை வைத்திருக்கும் இசக்கித்துரை என்பவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர்தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
சாட்சியத்தின் போது, ஜெயராஜ்-பென்னிக்சை போலீஸ்நிலையத்திற்கு அழைத்து செல்வதற்கு முந்தைய நாள், அவர்களின் கடைகளுக்கு அருகில் வந்த போலீஸ்காரர்கள் சிலர், பொதுமக்களிடம் தகாத முறையில் பேசியதாகவும், அப்போது ஜெயராஜ் தனது அருகில் நின்று கொண்டிருந்தவர்களிடம் இது போன்று பொதுமக்களிடம் கண்ணிய குறைவாக நடக்கும் காவல்துறையினர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதாகவும்,. இது நடந்த அடுத்த நாளில்தான் அவரையும், பென்னிக்சையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதாகவும் இசக்கிமுத்து கோர்ட்டில் கண்ணீர் மல்க கூறியதாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story