8 ஆண்டுக்கு பிறகு சகோதரர்களுடன் சேர்ந்த சிறுவன்-சிறுமி
மதுரையில் 8 ஆண்டுக்கு பிறகு சகோதரர்களுடன் சிறுவன்-சிறுமியை ஒப்படைத்த குழந்தைகள் நல குழுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மதுரை,
மதுரையில் 8 ஆண்டுக்கு பிறகு சகோதரர்களுடன் சிறுவன்-சிறுமியை ஒப்படைத்த குழந்தைகள் நல குழுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிறுவன்-சிறுமி மீட்பு
மதுரை ரெயில் நிலையம் அருகே கடந்த 2013-ம் ஆண்டு 7 வயது சிறுமி மற்றும் சிறுமியின் 2 வயது சகோதரன் ஆகியோர் யாசகம் செய்து கொண்டிருந்தனர். இதனை கண்ட போலீசார், அவர்கள் இருவரையும் மீட்டு மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழு அதிகாரிகள் சிறுமியின் படிப்பு நலன் கருதி அவர்களை திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்து படிக்க வைத்தனர். மேலும் அந்த 2 வயது சிறுவனின் பாதுகாப்பு நலன் கருதி கருமாத்தூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான். இந்த நிலையில் அவர்களின் பெற்றோர் இறந்துவிட்டனர். இதற்கிடையே 8 ஆண்டுகள் கழித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் உடன் பிறந்த 3 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் தஞ்சாவூரில் இருந்து மதுரை வந்து, மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் சகோதரி, சகோதரன் குறித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், எங்களுடைய சகோதரன் மற்றும் சகோதரி என்றும், கடந்த 2013 -ம் ஆண்டு மதுரையில் யாசகம் செய்த போது குழந்தைகள் நல குழுவினர் மீட்டு விட்டனர். தற்போது எங்களிடம் அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என கோரினர்.
சகோதரர்களிடம் ஒப்படைப்பு
இதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 2013 -ம் ஆண்டில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்த போது, அந்த சிறுமி திண்டுக்கல் காந்தி கிராமத்தில் உள்ள காப்பகத்தில் தங்கி பள்ளியில் 9-ம் வகுப்பு படிப்பதும், சிறுவன் மதுரையில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 3 அண்ணன்கள், ஒரு அக்கா ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று மதுரை வந்தனர். அவர்களிடம், அந்த சிறுமி மற்றும் சிறுவன் ஆகியோரை மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் பாண்டியராஜா, சண்முகம் ஆகியோர் இணைத்து வைத்தனர். மேலும் சிறுவன் மற்றும் சிறுமியின் எதிர்கால நலன் கருதி அந்தந்த இடங்களில் தங்க வைத்து படிக்க இருப்பதாக தெரிவித்தனர். 8 வருடங்களுக்கு பிறகு தன் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுடன், சிறுவன் -சிறுமியை இணைத்து வைத்த குழந்தைகள் நல குழுவிற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story